கள்ளக்குறிச்சி, அக். 25: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் 24 பேருக்கு 11வது முறையாக மேலும் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 68 பேர் உயிரிழந்தனர். சிகிச்சையில் குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினர். விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல சாராய வியாபாரி கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். அதில் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, மாதேஷ், கவுதம்சந்த், சிவக்குமார், கதிரவன், கண்ணன், சக்திவேல், சடையன், ஏழுமலை, ரவி, பன்சிலால், மாதேஸ், சாகுல்ஸ்ரஹமீது, செந்தில், தெய்வீகன், அய்யாசாமி, அரிமுத்து, செந்தில், வேலு, பரமசிவம்,
முருகேசன் ஆகிய 24 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 24 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 24 பேருக்கும், நவம்பர் 7 ம் தேதி வரை 11வது முறையாக மேலும் காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார்.
The post கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 24 பேருக்கு 11வது முறையாக மேலும் காவல் நீட்டிப்பு: நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.