கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19, 20-ந்தேதிகளில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 161 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா உள்பட 9 போலீசார் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கில் சாராயம் விற்பனை செய்தவர்கள், மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என 24 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதில் அரிமுத்து, கண்ணன், அய்யாச்சாமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை குழு அமைக்கப்பட்டு விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கலெக்டர் பிரசாந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி மற்றும் வருவாய் துறை, போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் 20-ந்தேதிக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. தொடர்ந்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, அந்த மனுவையும் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும், சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே இவ்வழக்கில் 18 பேரின் குண்டர் தடுப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் நேற்று கள்ளக்குறிச்சியில் வருகை தந்தனர். தொடர்ந்து அவர்கள் கருணாபுரத்தில் விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கோவிந்தராஜ் மற்றும் அவருடைய தம்பி தாமோதரன் ஆகியோரின் வீடுகளை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர். இதேபோல் மாதவச்சேரியில் சாராயம் விற்பனை செய்யப்பட்ட இடத்தையும் சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கிய நிலையில் இந்த சம்பவத்தில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.