உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் மதுரை ஆதீனம் கார் டிரைவரிடம் தனிப்படை போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ் நகர் ரவுண்டானா அருகில் கடந்த மே மாதம் 2ம் தேதி மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற மதுரை ஆதீனம் கார் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து பேட்டியளித்த ஆதீனம், ‘தன்னை கார் மோதி கொலை செய்ய முயற்சி நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது’ என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஆதீனத்தின் கார்தான் வேகமாக சென்ற மற்றொரு கார் மீது மோதுவது தெரியவந்தது. இதன் மூலம் மதுரை ஆதீனம் கூறியது பொய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு கார் ஓட்டுநர் முபாரக் அலி (37) என்பவர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் செல்வகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதே நேரம் மத மோதலை தூண்டும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்ட மதுரை ஆதீனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் செல்வக்குமாரை (47), கள்ளக்குறிச்சி மாவட்ட சிறப்பு பிரிவு போலீசார் விசாரணைக்காக மதுரையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் தனிப்படை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக செல்வக்குமாரை தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, காவல் ஆய்வாளர் அலுவலகம் முன்பு திரண்ட பாஜ வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகி பக்கிரிசாமி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சாதாரண விபத்து வழக்கில் எத்தனை மணி நேரம் விசாரணை செய்வீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பாஜவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
The post கள்ளக்குறிச்சி விபத்து விவகாரம் மதுரை ஆதீனத்தின் டிரைவரிடம் விசாரணை appeared first on Dinakaran.