
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணா. அவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு சாரதா என்பவருடன் திருமணம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு2 குழந்தைகள் உள்ளனர். தம்பதி கூலி வேலை பார்த்து வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணா தனது மனைவி சாரதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் சாரதா வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். பிரகதி லே-அவுட் பகுதியில் வந்தபோது, மனைவியை வழிமறித்த கிருஷ்ணா தகராறில் ஈடுபட்டார். மேலும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சாரதாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தொழிலாளிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த கிருஷ்ணா மனைவியை கண்டித்துள்ளார்.
ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் மனைவியை கொலை செய்ய திட்டமிட்ட கிருஷ்ணா, நேற்று முன்தினம் இரவு சாரதா வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் அவரை வழிமறித்து கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தலைமறைவான கிருஷ்ணாவை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.