
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கோஹ் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவரது மனைவி ரேகா (வயது 30). இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, சஞ்சுவின் சகோதரிவழி உறவினர் உமேஷ் (வயது 28). இவருக்கும் ரேகாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி ரேகாவும், சஞ்சுவும் வீட்டைவிட்டு ஓடியுள்ளனர். இது தொடர்பாக உறவினர்கள் போலீஸ் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இமாச்சலபிரதேச மாநிலம் கின்னனூர் பகுதியில் தங்கி இருந்த ரேகாவை கடந்த மாதம் 10ம் தேதி மீட்டு உறவினர்களிடம் ஒப்படைந்தனர். அதன்பின்னர், ரேகா தனது கணவராக சஞ்சுவுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், ரேகா தனது குடும்பத்துடன் வசித்து வந்த கோஹ் கிராமத்திற்கு உமேஷ் நேற்று மாறுவேடத்தில் வந்துள்ளார். பெண் வேடமணிந்து வந்த உமேஷ், ரேகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டில் ரேகா மட்டுமே இருந்துள்ளார்.
வீட்டிற்குள் சென்ற உமேஷ், தன்னுடன் வந்துவிடும்படி ரேகாவிடன் கூறியுள்ளார். ஆனால், கள்ளக்காதலுடன் செல்ல ரேகா விரும்பவில்லை. மேலும், மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த உமேஷ் தான் மறைத்து கொண்டுவந்த பெட்ரோலை ரேகா மீது தீ வைத்துள்ளார். இதில், ரேகா அலறி துடித்துள்ளார். உமேஷ் மீதும் தீப்பற்றியுள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ரேகா 70 சதவீத தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ரேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உமேசுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.