காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், கிராமமக்கள் மனு அளித்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட களியனூர் ஊராட்சி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மூலம் நிர்வகிக்கப்பட்டு பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளை மக்களை சென்று சேரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
களியனூர் ஊராட்சி பகுதி என்பதால் அங்கு வாழும் பொதுமக்கள் விவசாயத்தை நம்பியும், கூலி வேலை செய்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 100 நாள் வேலை செய்தும் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி வசித்து வருகின்றனர். தற்சமயம், காஞ்சிபுரம் மாநகராட்சி விரிவாக்க பகுதியில் காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி பகுதிகளில் சேர்த்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், களியனூர் ஊராட்சி பொதுமக்கள் தங்களுக்கு மாநகராட்சி பகுதியில் ஊராட்சியை சேர்த்தால் விவசாய நிலங்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு போன்றவைகள் கிடைக்கப்பெறாமல் அன்றாட வருமானத்திற்கு திண்டாடும் நிலை ஏற்படும் என்றும், எங்கள் வாழ்வாதாரத்தை பார்த்து கொள்வதில் சிரமம் ஏற்படும் என களியனூர் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், தங்கள் பகுதியை மாநகராட்சி பகுதியில் சேர்க்க வேண்டாம் என மனு அளித்தனர்.
The post களியனூர் ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கிராமமக்கள், கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.