களக்காட்டில் செடி-கொடிகள் படர்ந்து புதர்மண்டிய தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

2 weeks ago 5

*பொதுமக்கள் எதிர்பார்ப்பு

களக்காடு : களக்காட்டில் செடி-கொடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.களக்காடு கோவில்பத்தில் ஆயத்துறை தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு சீவலப்பேரிகுளத்தில் இருந்து வரும் தனி கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கோவில்பத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளின் முக்கிய நிலத்தடி நீராதாரமாக திகழும் இந்த தெப்பக்குளத்தின் நடுவே கிணறும் உள்ளது.

தெப்பக்குளத்தில் இறங்க ஏதுவாக தென்புறமும், மேற்கு புறமும் படித்துறைகளும் உள்ளன. கடந்த காலத்தில் கோவில்பத்து பகுதி பொதுமக்கள் இந்த குளத்தில் தான் குளித்து வந்தனர். மேலும் குளத்தின் நடுவில் உள்ள கிணற்றில் இருந்து தான் குடிநீருக்கும், சமையல் உள்ளிட்ட தேவைகளுக்கும் நீர் எடுத்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள விநாயகர், இசக்கியம்மன் கோயில்களில் சாமிகளுக்கு அபிஷேகம் செய்யவும் இந்த தண்ணீரை தான் பயன்படுத்தியுள்ளனர். தண்ணீரும் சுத்தமாகவே இருந்ததாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் காலப்போக்கில் தெப்பக்குளம் தூர்வாரப்படாமல், பராமரிப்பின்றி தூர்ந்து போனது. தெப்பக்குளத்தின் சுற்றுபுறச்சுவர்கள் உடைந்து மாயமாகி விட்டன. படித்துறைகளும் இருந்த இடம் கூட தெரியாமல் உருமாறி விட்டது. நடுவில் இருந்த கிணறும் இடிந்து தகர்ந்து விட்டது. தெப்பக்குளத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது. தெப்பக்குளத்தின் அருகில் கூட செல்ல முடியாதவாறு செடிகள் ஆக்கிரமித்துள்ளன. காடாக மாறிய தெப்பக்குளத்தில் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயும், சாக்கடை, மயமாக மாறி விட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் மாசுபட்டுள்ளது.

குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடும் நிலவுகிறது. அத்துடன் குளத்தில் உள்ள புதர்களில் தஞ்சமடைந்துள்ள பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் சாலைகளிலும், குடியிருப்பு பகுதியிலும் அவ்வபோது உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைகின்றனர். ஒரு காலத்தில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை முழுவதுமாக தீர்த்து வைத்த தெப்பக்குளம் இன்று புதர் மண்டி, குப்பைகள் சங்கமிக்கும் இடமாக மாறி நோய்களை பரவும் மையமாக மாறியுள்ளது. இதனை பார்க்கும் போது கண்ணீர் வருவதாக ஊர் பெரியவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே புதர் மண்டிய குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post களக்காட்டில் செடி-கொடிகள் படர்ந்து புதர்மண்டிய தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Read Entire Article