களக்காடு அருகே கீழப்பத்தை குலசேகரநாதர் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்

2 weeks ago 2

களக்காடு,ஜன.19: களக்காடு அருகே கீழப்பத்தை குலசேகரநாதர் கோயிலில் நாளை வருஷாபிஷேக விழா நடக்கிறது. களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தையில் பழமை வாய்ந்த குலசேகரநாதர், மகாலிங்கம், சுகந்த குந்தளாம்பாள் கோயில் உள்ளது. பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள பஞ்சலிங்க ஸ்தலங்களில் ஒன்றாக திகழும் இக்கோயிலில் வருஷாபிஷேக விழா நாளை (ஜன.20ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 6.30 மணி முதல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸீக்த ஹோமம், ருத்ர ஹோமம், துர்வஸீக்த ஹோமம் ஆகியவை நடக்கிறது. இதனைதொடர்ந்து பூர்ணாகுதி இடம்பெறுகிறது. காலை 9 மணிக்கு கோபுர அபிஷேகமும், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகங்களும் நடத்தப்படுகிறது. மதியம் 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. அதன் பின் மாலை 5 மணிக்கு புஷ்பாஞ்சலியும், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனைகளும் நடைபெறுகிறது. இரவில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் ராமசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

The post களக்காடு அருகே கீழப்பத்தை குலசேகரநாதர் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article