‘‘ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தியதால் மாஜி அமைச்சர் மீது இலைக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘கடலோர மாவட்டத்தில் இலை கட்சி ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்திருக்கு.. கூட்டத்திற்கு பின் மாஜி அமைச்சர் மணியானவர், தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் தனியாக ரகசியமாக ஆலோசனை நடத்தினாராம்… 2026 சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மணியானவர் தனியாக ஆலோசனை நடத்துகிறார் என நினைத்து தொண்டர்கள் சென்றார்களாம்… ஆனால் மணியானவர், கட்சியில் தனக்கு ஆதரவு எப்படி இருக்கிறது, 2026 சட்டமன்ற தேர்தலில் தனக்கு சீட்டு கிடைக்குமா, தலைமையிடத்தில் தன்னை பற்றி எதிர்ப்பாளர்கள் ஏதாவது புகார் தெரிவிக்கிறார்களா என்பது குறித்து கேட்பதற்காகத்தான் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என பின்னர் தெரிய வந்துருக்கு.. இதனால் மணியானவர் மீது தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கமிஷனில் கறாரா இருப்பது இல்லாம, பெண் ஊழியர்களை கேமரா வைச்சு வேற கண்காணிக்கிறாராமே வடமாநில அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் புலிகள் சரணாலயத்தில் வட மாநில அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் சரணாலய மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை பதிவு செய்யப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு கொடுக்காம விதிகளை மீறி தனக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமா கொடுத்துட்டு வருகிறாராம்.. அதற்கு முன் பணமாக 10 சதவீத கமிஷனையும் கறாரா வாங்கிக்கிறாராம்.. இதேபோல பணி வழங்குவதிலும் பல்வேறு முறைகேடுகளை செய்வதாக குற்றச்சாட்டு இருக்குது.. கமிஷனில்தான் கறாரா இருக்கிறார்ன்னு பார்த்தா, அலுவலக ஊழியர்களுக்கு அதிலும் பெண் ஊழியர்களுக்கு சிசிடிவி கேமராக்களை வைத்து மன உளைச்சலை ஏற்படுத்திக்கிட்டு வருகிறாராம்.. சோதனைச்சாவடி, வாகன சோதனை செய்ற இடங்களில் வைக்க வேண்டிய கேமராக்களை பெண் ஊழியர்கள் அறையில் வைத்து கண்காணிக்கிறாராம்.. இது இல்லாம இவருக்கான எல்லைப்பகுதியில் நேரடியாக கள ஆய்வுக்கு செல்வது இல்லையாம்.. ஆபீஸில் இருந்துகிட்டே ஆய்வு முடித்துவிடுகிறாராம்.. வடமாநில அதிகாரிங்கிறதால தமிழ் பேச தெரியறது இல்லை.. இதனால், வன விலங்குகளால் சேதமான பயிர்கள் குறித்து விவசாயிகளும், பொதுமக்களும் புகார் கொடுக்க போனா அவர்களை சந்திக்கிறதே இல்லையாம்.. இதுதொடர்பாக, உயர் அதிகாரிங்க வரைக்கும் புகார் அனுப்பியும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எதுவும் இல்லையேன்னு விவசாயிங்க கவலையில் இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘களஆய்வுகளில் தொண்டர்களின் கொந்தளிப்பை பார்த்து, கட்சித்தேர்தல் அறிவிப்பையே கைவிட்டுட்டாராமே இலைக்கட்சி தலைவர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனவுடன் சேலத்துக்காரரின் கைக்கு பவர் அனைத்தும் வந்துட்டாம்.. இதனால் அவர் என்ன நினைக்கிறாரோ அதன்படி ஒவ்வொரு செயலையும் செஞ்சிக்கிட்டு இருக்காராம்.. தனக்கு எதிராக இருக்கும் ரெண்டாங்கட்ட நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகளை சரியான நேரத்தில் கட்டம் கட்டிடனுமுன்னு வேலைகளை செஞ்சாராம்.. ஆனால் அவர் நினைத்தபடி எதுவுமே நடக்கலையாம்.. இதனால, இன்னொரு பிளானையும் கையில் வச்சிருந்திருக்காரு..
அதாவது, கட்சி தேர்தலை நடத்தி, தமக்கு வேண்டியவர்களை உள்ளே கொண்டுவந்து, கட்சியில் தன்னை எதிர்த்து, சமமாக நேருக்கு நேராக பேசுபவர்களே முற்றிலும் இல்லாத வகையில் செஞ்சிடணும்கிற திட்டத்தையும் வச்சிருந்தாராம்.. குறிப்பாக மம்மியை கண்டால் எல்லோரும் எழுந்து நிற்பது போல தன்னை பார்த்தாலே பயம் வரணுமுன்னும் நினைச்சிருக்காரு.. அதுவும் புஸ்வாணமா போச்சுதாம்.. கட்சியில் களஆய்வு செய்வதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாஜிக்களை நியமிச்சி அனுப்பியிருக்காரு.. அங்கு தொண்டர்கள் வெடிச்சிட்டாங்களாம்.. போகும் இடமெல்லாம் நடந்த கொந்தளிப்பை பார்த்த இலைக்கட்சி தலைவர் ரொம்பவே அதிர்ந்து போயிட்டாராம்.. நான் சொன்னால் எல்லோரும் கேட்டுக்கிட்டு போவாங்கன்னு நினைச்சேன், இப்படி குமுறிட்டாங்களேன்னு ஷாக்காயிட்டாராம்.. இதனால் இம்மாதம் நடக்கும் பொதுக்குழுவில் கட்சியின் தேர்தலை நடத்தும் அறிவிப்பை கைவிட்டுட்டாராம்.. தொண்டர்களின் விருப்பத்தின்படி கட்சியை நடத்தாமல் சுயபோக்கின் காரணமாக முடிவுகளை எடுத்ததினால் கட்சியில் எதிர்ப்பு கிளம்பி போச்சு.. சொந்த ஊரில் நடந்த கள கூட்டத்துக்கு மாஜிக்களை வரவேண்டாம் என கூறி அவரே நடத்தினாரு. ஆட்சியில் இருந்தபோது தொண்டர்களுக்கு எதுவுமே செய்யாம விட்டுட்டேன். மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் எல்லோரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வேன்னு தொண்டர்களை சமாதானம் செஞ்சதா ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘விடுதிக்கு அவ்வப்போது ஆய்வுக்கு சென்று கல்லா கட்டுகிறாராமே பெண் அதிகாரி ..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குறிச்சி பெயர் கொண்ட மாவட்டத்தில் அரசு தங்கும் மாணவர்கள் விடுதிகள் அதிகளவில் உள்ளது. இங்கு பெரும்பாலும் உள்ளூர் மாணவர்களே அதிகளவில் தங்கி படிக்கிறார்களாம்.. இதனால் வார இறுதி நாட்கள் மட்டுமின்றி அவ்வப்போது அரசு விடுமுறை தினங்களிலும் வீட்டிற்கு பறந்து விடுகிறார்களாம்.. இதனால் மாதத்தில் பெரும்பாலான நாட்கள் விடுதிகள் காலியாகிறதாம்.. ஆனால் அங்குள்ள பணியாளர்களோ தினமும் மேலிடத்துக்கு கணக்கு காட்டுவதில் தாராளமாக உள்ளார்களாம்.. இதுபற்றி அரசல் புரசலாக மேலிட பெண்மணிக்கு புகார் வரவே, களஆய்வு என்ற பெயரில் அங்கு அவ்வப்போது செல்கிறாராம்.. அப்போது விடுதிகளில் மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடப்பதை சுட்டிக்காட்டுவதோடு, பங்கில் தனக்குரியதை கேட்டு நச்சரிக்கிறாராம்.. இதனால் விடுதி பணியாளர்கள் தினமும் புலம்புறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post களஆய்வு களேபரத்தை கண்டு அஞ்சி கட்சி தேர்தல் அறிவிப்பை கைவிட்ட இலை தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.