‘‘மன்னர் மாவட்டத்தில் கோஷ்டி பூசலால் தலைமைக்கு தனித்தனியாக புகார் மனு அனுப்புறாங்களாமே தாமரை கட்சி நிர்வாகிகள் தெரியுமா..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியில் மன்னர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தனித்தனியாக தங்களின் புகார் கடிதங்களை தலைமைக்கு அனுப்பி வருகிறார்களாம்… கடந்த சில மாதங்களுக்கு முன் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்துருக்கு.. அப்போதில் இருந்தே மாவட்ட அளவில் உள்ள முன்னாள், இன்னாள் நிர்வாகிகளுக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளதாம்… 2026 சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் முட்டல் அதிகரித்து வருகிறதாம்.. இதற்கு முக்கியம் காரணம், சில நிர்வாகிகள்தானாம்.. இது மாநில தலைவருக்கு தெரியவில்லை.
இதனால் மாநில தலைவர் மீது கடும் அதிருப்தியில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் பிரச்னைக்குரிய இரண்டு தரப்பினரையும் போனில் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம்… லண்டனுக்கு படிக்க சென்று திரும்பிய பிறகு மாநில தலைவரை நேரில் சந்திக்கவும் மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனராம்.. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனி கூட்டம் போட்டு மாற்று கட்சிக்கு போகவும் திட்டமிட்டுள்ளதாக மாவட்டம் முழுவதும் அரசல்புரசலாக இந்த டாப்பிக் தான் ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உதவியாளரின் வாரிசுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதால் மாஜி ‘சாமி’ தரப்பு கடும் அப்செட்டில் இருக்கிறதாமே…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் கிராமப்புற தனித்துவமிக்க தொகுதி ஒன்றில் தேர்வாகி அமைச்சரவையில் இடம்பிடித்த சாமி பெயர் கொண்ட நபர், ஒன்றிய கட்சியில் செல்வாக்குமிக்க பதவியை எதிர்பார்த்தாராம்..
அதற்கான காய்களை டெல்லி சென்றும் அவ்வப்போது நகர்த்தி வந்தாரு.. ஆனால் அவரது கட்சிக்குள்ளேயே மற்றொரு தரப்பு உள்ளடி வேலை பார்த்ததால் அந்த திட்டம் டமால் ஆகி விடவே கப்சிப் ஆயிட்டார் சாமி.. தற்போது ஆளுங்கட்சியாக புல்லட்சாமியின் ஆதரவு பெற்ற நபர், ஒன்றிய கட்சி தரப்பு சாமியை கடந்த பொதுத்தேர்தலில் வீழ்த்திய நிலையில், தொடர்ந்து தொகுதியில் பல்வேறு களப்பணிகளை ஆற்றிவந்த சாமி அடுத்துவரும் தேர்தலில் மீண்டும் தானோ அல்லது வாரிசையோ நிறுத்தும் முடிவில் இருந்தாராம். ஆனால் திடீரென அமைச்சராக இருந்த சாமிக்கு உதவியாளராக இருந்தவரின் வாரிசு, இத்தொகுதியில் அதே கட்சியில் தானும் களமிறங்க முடிவெடுத்து குதித்துள்ளாராம்..இதற்காக கட்சி தலைமையிடம் உதவியாளரின் வாரிசு பேசியுள்ள நிலையில் அங்கிருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட்டு விட்டதாம்..
இதனால் சமீபகாலமாக அக்கட்சி தரப்பு நிகழ்ச்சிகளில் மாஜியை ஓரங்கட்டிவிட்டு உதவியாளர் வாரிசுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறதாம்.. தகவல்களும் அதற்கேற்ற வகையில் முந்திக்கொண்டு உதவிக்கு செல்கிறதாம்.. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறதாம் மாஜி தரப்பு..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கலவரம் வரும் முன்னாடி காதும் காதும் வச்சமாதிரி கள ஆய்வுக்கூட்டத்தை முடிச்சிட்டு மாஜி அமைச்சர்கள் பறந்துட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஹனி பீ மாவட்டத்துல கிழக்கு, மேற்குன்னு ரெண்டு கட்சி மாவட்டங்கள் இருக்கு… இந்த 2 மாவட்டங்களிலும் கடந்த வாரம், இலைக்கட்சி கள ஆய்வுக்கூட்டங்களை ஒரே நாளில் நடத்துனாங்க… இதுல என்னா மேட்டர்னா, கூட்டம் நடந்ததே தொண்டர்கள் பல பேருக்கு தெரியாததுதான்…
அதாவது, கிழக்கு மாவட்ட கூட்டம் ஹனிபீ நகருக்கு அருகில் பெரியகுளம் சாலையில் ஒரு மண்டபத்திலும், மேற்கு மாவட்ட ஆய்வு கூட்டம் கம்பம் சாலையில் உள்ள ஒரு மண்டபத்திலும் நடத்தினாங்க… ஒதுக்குப்புறமா இருக்கிற இந்த மண்டபங்களில் கள ஆய்வுக்கூட்டம், நடப்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கலையாம்.. நிறைய பேருக்கு தகவலே போகலை… ஹனிபீ மாவட்ட முக்கிய தலைகள், நிர்வாகிகள் மத்தியில் மட்டும் தகவல் தெரியுமாம்… காதும், காதும் வச்ச மாதிரி கச்சிதமாக நடத்தி முடிச்சிட்டாங்க.. கூட்டங்களில் பங்கேற்ற மாஜி அமைச்சர்களான ரெட்ஹில்லும், பூட்டு மாவட்டக்காரரும் வந்த வேகத்துலயே, கூட்டத்தை வேக வேகமா முடிச்சுக்கிட்டு கள ஆய்வுல கலவரம் வர்றதுக்கு முன்னாடியே கம்பி நீட்டிட்டாங்களாம்… இதனால் தொண்டர்கள் கடும் அப்செட்…
கள ஆய்வுக்கூட்டத்தை போக்குவரத்து மிகுந்த பகுதியில ஒரு மண்டபம் பார்த்து நடத்தி இருந்தால், கட்சிக்கொடி கட்டி, காரும் – வேனும் வந்து நின்னா பரபரப்பாகி இருக்கும்… கட்சியும் உயிரோட்டமா இருக்குதுன்னு மக்களை நம்ப வச்சு இருக்கலாம்… எங்கேயோ ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில கூட்டத்தை நடத்துனதுக்கு எதுக்குப்பா நடத்தணும்… எப்படியிருந்த கட்சி இப்படி ஆயிருச்சே…. என தொண்டர்கள் புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்.’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தட்டித் தூக்குகிறார்களாமே வரி வசூலர்கள்…’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாநகராட்சியில் சமீப காலமாக, வரி வசூலர்கள் பல்வேறு புகார்களில் சிக்கி வருகிறார்கள். குறிப்பாக, மத்திய மண்டலத்தில் 4 பேர், கிழக்கு மண்டலத்தில் 4 பேர் என மொத்தம் 8 வரி வசூலர்கள் மீது அதிகளவில் குற்றச்சாட்டு வருகிறது.
பதவி மூப்பு அடிப்படையில் உள்ளவர்களுக்கு மட்டுமே வரி வசூல் பணி வழங்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இவ்விரு மண்டலங்களிலும் மீறப்பட்டுள்ளது. இதனால், வரி வசூலர்கள் கரன்சி குவிப்பது ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், அன்றாடம் அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பதால், உயரதிகாரிகள் கூறும் பணிகளை சரிவர செய்வதில்லையாம். கரன்சி அதிகமாக குவிந்து வருவதால், இந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்லவும் மனம் இல்லையாம். மேலதிகாரிகளும் இவர்களை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரி வசூலர்களுக்கு மாத சம்பளம் ₹25 ஆயிரம் மட்டுமே. ஆனால், இவர்கள் மாதம் ₹5 லட்சம் வரை தட்டி எடுக்கிறார்கள். இந்த ரேசில் கிழக்கு மண்டலத்தில் 4 பேர், மத்திய மண்டலத்தில் 4 பேர் என மொத்தம் 8 பேர் டாப்…பில் உள்ளனர். பதவி மூப்பு அடிப்படையில் வரி வசூலர் பணி மற்றும் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்படாத காரணத்தால்தான் இந்த நிலை என்கிறார்கள், சில நியாயமான ஊழியர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.
The post கள ஆய்வு கலவரம் ஆவதற்குள் கம்பி நீட்டிய மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.