
ஈரோடு,
ஈரோடு அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந் தேதி தேர்வு நடைபெற்றது. தேர்வு தொடங்குவதற்கு முன்பு அறைக்கு வெளியே உள்ள வளாகத்தில் மாணவ-மாணவிகள் தங்களது புத்தகப்பைகளை வைத்துவிட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.
தேர்வு முடிந்த பிறகு வெளியே வந்து பார்த்தபோது, புத்தகப்பைகள் திறக்கப்பட்டு கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ-மாணவிகள் பைகளை சோதனை செய்தபோது, அவற்றில் உள்ள செல்போன்கள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு மாணவ- மாணவிகள் தகவல் கொடுத்தனர். அவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் சோதனை செய்தனர். அப்போது கல்லூரிக்குள் புகுந்த ஒருவர், தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவ- மாணவிகளின் புத்தகப்பைகளில் உள்ள செல்போன்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் புகார் தெரிவித்ததை அடுத்து வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து போலீசில் விசாரணை நடத்தினா். செல்போன்களை திருடியவர், சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 13 செல்போன்கள் மீட்கப்பட்டன.