கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியீடு

5 days ago 4

சென்னை,

தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 -ம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article