கல்லறை தோட்டம் ஆக்கிரமிப்பை கண்டித்து கயத்தாறு ஆலய வளாகத்தில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்

3 weeks ago 5

கயத்தாறு,அக்.21: கயத்தாறில் தங்கள் கல்லறை தோட்டத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து ஆலய வளாகத்தில் கிறிஸ்தவ இறைமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கயத்தாறு வடக்கு தெருவில் புனித லூர்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை சேர்ந்த பங்கு மக்கள் தாங்கள் பயன்படுத்தும் கல்லறை தோட்டத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி நேற்று ஆலய வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய கயத்தாறு பங்குத்தந்தை எரிக்ஜோ, பங்கு பேரவை செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘எங்கள் புனித லூர்து அன்னை ஆலய இறைமக்கள் இறந்தால் அடக்கம் செய்யக்கூடிய கல்லறை தோட்டம் ஊருக்கு வடக்கே அமைந்துள்ளது. இதனை நாங்கள் 450 வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில் சில தனிநபர்கள் எங்கள் கல்லறை தோட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சில கல்லறைகளை சரள்மண்ணை கொண்டு மூடியதுடன், அந்த பகுதி எங்களுக்கு உரியது என சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நாங்கள் 450 வருடங்களாக தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வரும் இக்கல்லறை பகுதிக்கு அரசு அதிகாரிகள் தார் சாலை, தங்கும் நிழற்கூடம் அமைத்து கொடுத்துள்ள நிலையில் இதனை தனிநபர்கள் சொந்தம் கொண்டாடுவது முறையற்றது. இதுபற்றி நாங்கள் கயத்தாறு காவல்நிலையம் மற்றும் கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே இதனை கண்டிக்கும் வகையில் எங்கள் லூர்து அன்னை ஆலய வளாகத்தில் அடையாள உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம். மேலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 2ம் தேதி இறந்து போன எங்கள் முன்னோர்களின் கல்லறையில் நாங்கள் வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டும் நாங்கள் வழிபாடு செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன. எனவே இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் ஆலய இறைமக்கள் ஒன்று திரண்டு கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கு பேரவை துணைத்தலைவர் ஜூடு ததேயு, சமுதாயத் தலைவர் சூசை மாணிக்கம், பங்கு பேரவை பொருளாளர் மரிய வியாப்பன், சமுதாய பொறுப்பாளர் ஜெயராஜ், சத்திரப்பட்டி உபதேசியர் ஞானசாமி உட்பட இறைமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

The post கல்லறை தோட்டம் ஆக்கிரமிப்பை கண்டித்து கயத்தாறு ஆலய வளாகத்தில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article