திருக்கழுக்குன்றம்: கல்பாக்கத்தில் பேருந்தை ஏன் நிறுத்த மாட்டீர்கள்? என்று கேட்ட பெண் பயணியை, தகாத வார்த்தைகளால் பேசி அடிக்கப்பாய்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி, நேற்று சென்னை சென்று திரும்பும்போது, பனையூர் சுங்கச்சாவடி அருகே கல்பாக்கம் வருவதற்காக பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக (இசிஆர் சாலை) சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஒன்று வந்தது.
அந்த, பேருந்து நடத்துநரிடம் கல்பாக்கம் செல்ல வேண்டும் என்று அப்பெண் பயணி கேட்டபோது, கல்பாக்கத்தில் இந்த பேருந்து நிற்காது என்று கறாராக கூறிவிட்டு பேருந்தினை, அங்கிருந்து எடுத்துச்சென்று விட்டனர். உடனே, அப்பெண் பின்னால் வந்த மற்றொரு அரசு பேருந்தில் ஏறி, கல்பாக்கம் வந்து இறங்கியபோது, பனையூரில் தன்னை ஏற்றாமல் வந்த குறிப்பிட்ட சிதம்பரம் செல்லும் அரசு பேருந்து அங்கு வந்து நின்றது. உடனே, அந்த பெண், சம்பந்தப்பட்ட பேருந்து, நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம், “இந்த பேருந்து கல்பாக்கத்தில் நிற்காது என்று கறாராக கூறிவிட்டு வந்து, இப்போது மட்டும் எப்படி இங்கு பேருந்து நின்றது’’ என்று கேட்டபோது, பேருந்தின் ஓட்டுநரும், நடத்துனரும் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் அசிங்க, அசிங்கமாக பேசிக்கொண்டே பேருந்தில் இருந்த படியே அப்பெண் பயணியை அடிக்கப் பாய்ந்துள்ளனர்.
இதை, அங்கிருந்த மற்ற பயணிகள் வீடியோ எடுத்தபோது, அவர்களையும் அசிங்கமாக பேசினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரும், நடத்துநரும் பெண் பயணியிடம் அசிங்கமாக பேசி, அடிக்கப்பாய்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பெண் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூட தெரியாத நடத்துநர், ஓட்டுநர்கள் மீது சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முக்கிய நகரமாக விளங்கி வருகின்ற கல்பாக்கத்தில் அனைத்து பேருந்து பேருந்துகளும் நின்று செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
The post கல்பாக்கத்தில் பேருந்தை ஏன் நிறுத்த மாட்டீர்கள்? எனக்கேட்ட பெண் பயணியை தகாத வார்த்தையில் பேசி அடிக்கப்பாய்ந்த ஓட்டுநர், நடத்துநர்: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.