முப்பெரும் தேவியரில் ஒருவரான சரஸ்வதிக்கு கலைமகள், பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, செளதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப் பல பெயர்கள் உள்ளன. கல்விக்கு சிறந்தவளாக திகழும் கலைமகளை சென்று தரிசிக்கக்கூடிய திருத்தலங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மதுரை
மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கும், ஸ்ரீமஹாலட்சுமிக்கும் தனி சந்நதிகள் உள்ளன. இத்திருத்தலத்தில் தூண் ஒன்றில் இருகைகள் மட்டுமே உடைய சரஸ்வதியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தேவி தன் இடக்காலை ஊன்றி வலக்காலை முன்வைத்த நிலையில் வீணை வாசிக்கும் தோற்றத்தில் நின்ற திருக்கோலத்தில் வலது தோளில் கிளியுடன் காட்சி தருகிறாள்.
பத்மநாபபுரம்
கம்பர் தமிழ்நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது தான் வணங்கிய சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்து விட்டார். அச்சிலையே இன்று பத்மநாபபுரம் கோட்டையில் நிறுவப்பட்டுள்ளது.
வேதாரண்யம்
திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யத்தில் சரஸ்வதி தேவி கலைகளின் வடிவாய் நின்று வழிபட்டதால் இங்கு அமைந்துள்ள சரஸ்வதி ‘வேத சரஸ்வதி’ என்று போற்றப்படுகிறாள். திருநெய்த்தானம் ஸ்ரீஇருதயபுரீஸ்வரரை சரஸ்வதி தேவி பூஜித்து பேறு பெற்ற தலம் இது. திருவையாறு சப்ததானத்தலங்களில் ஒன்றாகும். இங்கும் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது.
கைலாசநாதர் கோயில்
பல்லவர் காலத்தில் ராஜசிம்ம பல்லவனால் எழுப்பப்பட்ட ஆலயம். இத்திருக்கோயிலில் 3 இடங்களில் சரஸ்வதியின் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இதில் இரு சிற்பங்களில் 4 திருக்கரங்களும் அதில் வலக் கரங்களில் அக்ஷமாலையும் தியான முத்திரையும் விளங்க, இடக்கரங்களில் கமண்டலமும் ஓலைச்சுவடி கொண்டு விளங்குகிறாள். மூன்றாவது சிற்பத்தில் தன் வலக்கரங்களில் அக்ஷமாலையும் அபய முத்திரையும் இடது கரங்களில் கமண்டலமும், தாமரையும் ஏந்தியுள்ளாள்.
சீர்காழி
சிவபெருமானை அவமதிக்கும் நோக்குடன் தக்ஷன் ஒரு பெரும் யாகம் செய்த போது, அதில் கலந்து கொண்ட அனைவரையும் சிவபெருமானின் ஜடாமுடியில் உதித்த வீரபத்ரர் விரட்டி அடித்து யாகத்தையும் கலைத்தவர், யாகத்தில் கலந்து கொண்ட பிரம்மனை தண்டித்து அவரது மனைவியான சரஸ்வதியின் மூக்கை அரிந்து விடுகிறார். தன் தவறை உணர்ந்து சரஸ்வதி சீர்காழியில் உள்ள சட்ட நாதரை தனது துணைவரான பிரம்ம தேவருடன் வழிபட்டு அருள் பெற்றாள்.
பெருவேளூர்
அப்பர், சம்பந்தர் முதலியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இங்கு சரஸ்வதி சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதாகக் கூறப்படுகிறது. பிரம்ம தேவன் வலப்புறம் வாணியுடனும், இடதுபுறம் சரஸ்வதியுடனும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால், இத்தல ஈசன், வாணிசரஸ்வதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார்.
திருப்பூந்துருத்தி
தஞ்சையில் உள்ள திருப்பூந்துருத்தியில் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறைக் கோஷ்ட தேவதையாக சரஸ்வதி விளங்குகிறாள். இவளது மேலிரண்டு கரங்களில் அட்சமாலையும் சுவடியும் காணப்படுகிறது. கீழிரண்டு திருக்கரங்களில் அபய ஊரு முத்திரைகளை தாங்கியுள்ளாள்.
திருவீழிமிழலை
சரஸ்வதி காலை, மதியம், மாலை மூன்று வேளைகளில், காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி என மூன்று ரூபங்களில் விளங்குவதாக வேதங்கள் சொல்கின்றன. மூன்று வடிவங்களை தாங்கி ஸ்ரீவீழிநாதரை வழிபட்டதால் காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் மற்றும் சரஸ்வதீஸ்வரர் என்ற திருநாமங்களில் லிங்க ரூபங்கள் விளங்குகின்றன.
திருநெல்வேலி
திருநெல்வேலியில் உள்ள கீழமாட வீதியில் கோமதி அம்மன் திருச்சந்நதிக்கு எதிரே கலைவாணி என்று தனி கோயில் உள்ளது. சிருங்கேரி மகா சந்நிதானம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க உருவாக்கப்பட்ட திருக்கோயிலில், புதன்கிழமை தோறும் தேவியை அர்ச்சித்து வழிபட கல்வி ஞானம் மேன்மை பெறும் என்பது ஐதீகம்.
ராமேஸ்வரம்
ராமேஸ்வரத்தில் உள்ள பல தீர்த்தங்களில் காயத்ரீ தீர்த்தம், சாவித்திரீ தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தங்கள் அடக்கம். இத்திருக்கோயிலில் பத்ர பீடத்தில் சுகாசனத்தில் சதுர் புஜங்களுடன் சரஸ்வதி அமர்ந்திருக்கிறாள். பின் கரங்களில் அக்ஷமாலை, சுவடி முன் கரகங்களில் வீணையை ஏந்தியபடி காட்சி தருகிறாள்.
காஞ்சிபுரம்
முக்தி தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழம்பெரும் திருக்கோயில்களில் ஒன்று கச்சபேஸ்வரர் திருக்கோயில். இங்கு சியாமளா தேவிக்கு தனி சந்நதி உள்ளது. சரஸ்வதி சிவனை வழிபட்டு அருள் பெற்ற தலம். தேவி தன் திருக்கரங்களில் வீணை, கிளி, பாசம், அங்குசம், குயில், தாமரை, நீலோத்பலம், மலரம்பு, கரும்புவில் ஆகியவற்றை ஏந்திய நிலையில் காட்சி தருகிறாள்.
கடலங்குடி
நாகை மாவட்டம், கடலங்குடி கிராமத்தில் உள்ள திருமேனியார் சிவாலயத்தில் சரஸ்வதியின் திருமேனி காண்போரைக் கவரும் விதத்தில் உள்ளது. பத்ர பீடத்தில் இடது காலை தொங்கவிட்டு அதன் மேல் வலக்காலை வைத்துக் கொண்டு பின் வலக்கரத்தில் ஜபமாலையும் முன் கீழ்கரத்தில் சுவடியும் இடமேற்கரம் மற்றும் முன் வலக் கீழ்கரங்களில் வீணையைத் தாங்கி மீட்பது போல் சிற்பம் வடிக்கப்
பட்டுள்ளது. கையில் வளையல்களும் காலில் கொலுசும் கழுத்தில் முத்துச் சரங்களும், தலையில் கிரீடமும் தரித்துக் கொண்டு காண்போரைக் கவரும் வண்ணம் அமர்ந்திருக்கிறாள்.
திருக்கண்டியூர்
அட்ட வீரட்டானத் திருத்தலங்களில் ஒன்றான கண்டியூர் சிவதலம் பாடல் பெற்ற திருத்தலமாகும். திருவையாறு தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இத்தலத்தில் பிரம்ம தேவனின் ஐந்தாவது தலை கொய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக இத்தலத்தீசர் ஸ்ரீபிரம்ம சிரக்கண்டீசர் என்று அழைக்கப்படுகிறார். மூலவருக்கு பக்கத்தில் பிரம்ம தேவனும் சரஸ்வதி தேவியும் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். இங்குள்ள பிரம்மதேவர் தாமரை, ஜபமாலை ஏந்தியும் அவருடைய வலப்புறம் அமர்ந்துள்ள சரஸ்வதி தேவி சர்வாலங்கார பூஷிதையாகக் காட்சி தருகிறாள்.
காளத்தி
ஒரு முனிவரின் சாபத்தின் காரணமாக ஊமையான சரஸ்வதி தேவி இவ்வூர் வந்து தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, தினமும் அதில் மூழ்கி குளித்து இறைவனை வணங்கி தனது ஊமை பாவம் நீக்கப்பெற்றாள். அதனால் இங்குள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் கல்வியறிவு வளரும் என்பது நம்பிக்கை.
ஐதராபாத்
ஐதராபாத் அருகில் மகபூப் மாவட்டத்தில் உள்ள அலம்பூரில் கோட்டைக்குள் பால பிரம்மா, குமார பிரம்மா, அர்க்க பிரம்மா, வீர பிரம்மா, விஸ்வ பிரம்மா, தாரகா பிரம்மா, கருட பிரம்மா, சுவர்க்க பிரம்மா, பத்ம பிரம்மா ஆகிய ஒன்பது பிரம்மாக்களின் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இந்த ஒன்பது பிரம்மாக்களுக்கும் தனித்தனி சரஸ்வதி சந்நதிகள் இல்லாமல், ஒரே சந்நதியே அமைந்துள்ளது.
The post கலைமகளின் கவின்மிகு கோயில்கள் appeared first on Dinakaran.