சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாட பல்வேறு துறையின் கீழ் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா” கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ சென்னை, கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் இன்று (ஜன.13) தமிழ்நாடு முதல்வரால் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், சென்னையில் 18 இடங்களில் நாளை முதல் 17ம் தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன. விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்துடன் புகழ்பெற்ற பிற மாநிலக் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விழா நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவு வகைகளைக் கொண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து பொங்கலிட்டு, ஆட்டம் பாட்டத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கலை பொதுமக்கள் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடிடும் வகையில், கிராமிய மற்றும் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் போன்றவை தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் மூலம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
The post கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகளுடன் தமிழகத்தில் அரசுத்துறைகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு appeared first on Dinakaran.