ராமநாதபுரம்,ஜன.26: ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் 2,400 பேர் தேர்வு செய்யப்பட்டு பயன்பெற்றதாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞரின் கனவு இல்லம் கான்கிரீட் வீடாக கட்டிட தலா ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானம் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 101 பேர், கடலாடி ஒன்றியத்தில் 623 பேர்,
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் 69 பேர்,மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 501 பேர், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 258 பேர், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 134 பேர், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 43 பேர், ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 107 பேர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 பேர், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் 282 பேர், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 182 பேர் என மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 2,400 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெகுநாதபுரம் குடும்ப தலைவி ஒருவர் கூறும்போது, ‘‘நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனது கணவர் விவசாய கூலியாக உள்ளார். தினமும் எங்களுக்கு கிடைக்கும் கூலி வருமானத்தில் தான் வாழ்ந்து வருகின்றோம். எங்களுக்கென்று சொந்தமாக வீடு எதுவும் கிடையாது. தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பித்தேன். தற்போது கலெக்டரிடம் நிர்வாக அனுமதி ஆணை பெற்றேன். இதன் மூலம் நான் சொந்தமாக வீடு கட்டி கொள்வேன். இந்த திட்டத்தை அறிவித்து என்னைப் போன்ற கடைக்கோடி மக்களும் பயன்பெறும் வகையில் செயலாற்றி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.
The post கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாவட்டத்தில் 2400 பேர் பயன் appeared first on Dinakaran.