செம்பனார்கோயில், நவ.20: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் செம்பனார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது தரங்கம்பாடி தாலுகா எரவாஞ்சேரி ஊராட்சி கீழத்தெரு பகுதியில் பலத்த சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி,பிரிட்ஜ், மின்விசிறி, மின்மோட்டார் உள்ளிட்ட ஏராளமான மின் சாதன பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து பழுதாகின. இடி தாக்கியபோது சில வீடுகளில் பீஸ்கேரியர், சுவிட்ச், செட்டாப்பாக்ஸ் ஆகியவை வெடித்து சிதறியதாகவும் பல வீடுகளில் இடி தாக்கியதில் வீடுகள் அதிர்வு ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். இந்நிலையில் தங்கள் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து பழுதாகியதால் செய்வதறியாமல் தவிப்பதாக கூறினர். மேலும் இடி தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கலெக்டர் தகவல் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அறிவிப்பு தரங்கம்பாடி அருகே எரவாஞ்சேரி கிராமத்தில் வீடுகளில் இடி தாக்கி மின்சாதன பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.