மயிலாடுதுறை,செப்.29: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் மகாபாரதி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் வழியாக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கமானது பாலின பாகுபாடு அடிப்படையில் குழந்தைகளின் பாலினம் அறிந்து கொல்லப்படுவதை தடுத்தல், பெண் குழந்தைகள் பிறப்பினை உறுதிசெய்து, அவர்களின் கல்வி, திறன் மற்றும் பங்கேற்பினை மேம்படுத்துதலாகும்.
குழந்தை திருமணங்கள், குழந்தை தொழிலாளர், குழந்தைகளுக்கு பாலின ரீதியாக தொந்தரவுகள், குழந்தைகளின் கல்வி இடைநிற்றல், சரியான பாதுகாப்பு இல்லை எனில் குழந்தைகளுக்கு உதவும் விதமாக 24 மணி நேர இலவச அவசர உதவி எண் 1098க்கு அழைக்கலாம். மேலும் மகளிர்களுக்கு குடும்ப வன்முறை, வரதட்சனை கொடுமை, குழந்தை திருமணங்கள், பெண்கள் பாதுகாப்பு கருதி 24 மணி நேர இலவச அவசர உதவி எண் 181-க்கு அழைக்கலாம். பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் முக்கிய நோக்கம், கல்வி பங்கேற்பினை உறுதி செய்து அவர்களின் உரிமைகளை போற்றுவதாகும்.
தமிழ்நாடு அரசு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஊராட்சிகளில் போதைப்பொருட்கள் இல்லாத நிலையை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நகர, கிராம ஊராட்சிகளில் தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம். போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அறிந்தால் உடனடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்: 1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து குழந்தை திருமணம், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பெண் குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் மற்றும் குழந்தை தொழிலாளர் இல்லாத ஊராட்சிகளான மயிலாடுதுறை வட்டாரம் அருண்மொழித்தேவன் ஊராட்சி, சீர்காழி வட்டாரம் கற்கோவில், குத்தாலம் வட்டாரம் மாந்தை, செம்பனார்கோவில் வட்டாரம் கொத்தங்குடி, கொள்ளிடம் வட்டாரம் ஆரப்பள்ளம் ஆகிய ஊராட்சிகளுக்கு சிறந்த ஊராட்சிக்கான விருதினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் அரசு அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் ஆய்வு; மயிலாடுதுறை மாவட்டஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.