'கற்றாழை சாறு' என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை குடித்த 9-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

20 hours ago 2

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைசூரு ரோட்டில் வசிக்கும் தம்பதியின் மகள் நிதி கிருஷ்ணா(வயது 14). இந்த சிறுமி பள்ளிக்கூடம் ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் கற்றாழை சாறு குடிப்பதை மாணவி வாடிக்கையாக வைத்திருந்தாள்.

அதன்படி, கடந்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி வீட்டில் பாட்டிலில் இருந்த கற்றாழை சாறை எடுத்து நிதி கிருஷ்ணா குடித்துள்ளாள். அதன்பிறகு, அவளுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிட்டி மார்க்கெட் அருகே உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் நிதி கிருஷ்ணா அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நிதி கிருஷ்ணா உயிரிழந்தாள்.

போலீஸ் விசாரணையில், மாணவி குடித்து வரும் கற்றாழை சாறு காலியாகி உள்ளது. அந்த பாட்டிலில் செடிகளுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்தை பெற்றோர் நிரப்பி வைத்திருந்தனர். இதுபற்றி அறியாமல் அது கற்றாழை சாறு என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை மாணவி நிதி கிருஷ்ணா குடித்து பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article