கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்று தள்ளிவிட்ட விவகாரம் ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிர சோதனைக்கு டிஜிபி உத்தரவு: மாநிலம் முழுவதும் ரயில்வே போலீசார் நடவடிக்கை

3 hours ago 1

சேலம்: கோவை-திருப்பதி ரயிலில் கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று கீழே தள்ளிவிட்ட சம்பவத்தையடுத்து, ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிரமாக சோதனையிட ரயில்வே போலீசாருக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் நேற்று காலை முதல் ரயில்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோவை-திருப்பதி ரயிலில் கடந்த 6ம் தேதி, ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் பயணித்தார். பெண்களுக்கான பிரத்யேக முன்பதிவில்லா பெட்டியில் பயணித்த நிலையில், ஜோலார்பேட்டையில் அவருடன் பயணித்த அனைத்து பெண்களும் இறங்கிவிட்டனர்.

இதனால், அப்பெட்டியில் கர்ப்பிணி பெண் மட்டும் தனியாக இருந்தார். ரயில் புறம்படும் போது, அப்பெட்டியில் ஏறிய வாலிபர், கர்ப்பிணி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்று, கடுமையாக தாக்கி கீழே எட்டி உதைத்து தள்ளிவிட்டார். ஓடும் ரயிலில் இருந்து விழுந்த அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட வேலூர் கே.வி.குப்பத்தை சேர்ந்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தையடுத்து, ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பை அதிதீவிரப்படுத்த தமிழ்நாடு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு ரயில்வே போலீஸ் டிஜிபி வன்னியபெருமாள் நேற்று, அனைத்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், ‘பெண் பயணிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் ஆண்கள் அத்துமீறி நுழைவதும், அராஜகமான செயல்களில் ஈடுபடுவதுமான செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற செயல்களை கண்காணிக்கும் விதமாகவும், கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், ரயில்கள் புறப்படும் முன்பு அந்த வண்டிகளில் பெண்களுக்கான பயண பெட்டிகளில் தமிழ்நாடு இருப்புபாதை பெண் காவலர்கள் நுழைந்து, அப்பெட்டிகளில் பயணிக்கும் பெண் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனரா? என்பதையும், ஆண் பயணிகள் யாரேனும் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்களா? என்பதையும் பார்க்க வேண்டும்.

பெண் பயணிகளுக்கு வேறு ஏதேனும் இடர்பாடுகள் அல்லது கோரிக்கைகள் உள்ளதா? என்பதையும் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து, அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திட வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் பெண் காவலர்களுடன் ஆண் காவலர்களை உதவிக்காக அனுப்பி வைக்கலாம். குறிப்பாக ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎப்) சேர்ந்த பெண் காவலர்களை இப்பணியில் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக அறிக்கையை அளித்திட வேண்டும்’, என டிஐிபி உத்தரவிட்டுள்ளார். ரயில்வே டிஜிபியின் உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதும் நேற்று காலை முதல், அனைத்து ரயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரயில்வே பெண் போலீசார் சோதனையிட்டு, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு பணியில் ஆர்பிஎப் பெண் போலீசாரையும் ஈடுபடுத்தியுள்ளனர்.

சேலம் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை, பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றதும், பெண்கள் பெட்டியில் ஏட்டு கங்கா, ஆபிஎப் பெண் காவலர் சபீதா உள்ளிட்ட போலீசார் ஏறி சோதனையிட்டனர். ஆண்கள் யாரும் அப்பெட்டியில் உள்ளனரா? என பார்த்து, குறைகள் இருந்தால் தெரிவிக்க போலீசார் கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து, சேலம் வழியே சென்ற அனைத்து ரயில்களிலும் பெண்களுக்கான பிரத்யேக பெட்டியில் பெண் போலீசார் சோதனையிட்டனர்.

இதேபோல், சென்னை, காட்பாடி, ஜோலார்பேட்டை, ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயில்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே பெண் போலீசார் சோதனை செய்து, பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஒருவர் அல்லது இருவர் என குறைந்த எண்ணிக்கையில் பெண் பயணிகள் இருந்தால், அப்பெட்டியில் பாதுகாப்பிற்காக பெண் போலீசார் உடன் பயணித்தனர். இந்த கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்று தள்ளிவிட்ட விவகாரம் ரயில்களில் பெண்கள் பெட்டியில் தீவிர சோதனைக்கு டிஜிபி உத்தரவு: மாநிலம் முழுவதும் ரயில்வே போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article