கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற கணவருக்கு நேர்ந்த சோகம்

3 weeks ago 4

கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த தெற்கு திட்டைகிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் ஆனந்தராஜ். இவர் சென்னை வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி நீதிகா. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ள நீதிகா, சேத்தியாத்தோப்பு அருகே ஓடாக்கநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் நீதிகாவை பார்ப்பதற்காக ஆனந்தராஜ் விடுமுறையில் நேற்று முன்தினம் தனது மாமியாா் வீட்டுக்கு வந்தார். பின்னர் தனது மனைவிக்காக இளநீா் பறிக்க அங்கு வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் ஆனந்தராஜ் ஏறினார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தபோது எதிர்பாராதவிதமாக மரத்தின் அருகில் கொட்டகைக்கு சென்ற மின்ஒயரில் சிக்கினார்.

இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆனந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article