கர்ப்பப்பை புற்றுநோய் தடுக்கும் வழிகள்!

1 week ago 4

நன்றி குங்குமம் டாக்டர்

உலக அளவில் பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கிய இடத்தில் இருப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய். இது உலகளவில் பெண்களுக்கு ஏற்படும் நான்காவது பொதுவான புற்றுநோயாக உள்ளது. இந்தியாவில் இந்த நோயின் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது தடுக்கக்கூடிய ஒன்றாக உள்ளபோதிலும் இதனால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் உயிர் இழந்துவருகின்றனர்.

எனவே, ஆண்டுதோறும் ஜனவரி மாத இறுதியில் கர்ப்பப்பை வாய் சுகாதார மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ​​‘‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க முடியும்” என்பதை வலியுறுத்தும் வகையில், தடுப்பு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் பயனுள்ள சிகிச்சையை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வழிமுறைகளை மேற்கொள்வதை முக்கியமாக கடைபிடிக்கப்படுகிறது என்று சென்னையிலுள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ பிரிவு இயக்குனர் மருத்துவர் பத்மப்ரியா விவேக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை

இந்தியாவில் மருத்துவத் துறையில் அதிநவீன முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது ஒரு பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. இது முதன்மையாக நடுத்தர வயது பெண்களைப் பாதிக்கிறது. இதற்கு காரணமாக அதிக ஆபத்துள்ள மனித பாப்பிலோமா வைரஸ் வகைகளுடன் தொடர்ச்சியான தொற்று உள்ளது. சமூக பொருளாதார, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இதை தடுப்பதற்கு பெரும் தடையாக உள்ளன.

தொற்றுநோயியல் நுண்ணறிவு

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது இந்தியப் பெண்களிடையே இரண்டாவது இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் சரியான மருத்துவப் பரிசோதனை இல்லாததே ஆகும். அதை திறம்பட மேற்கொள்ளும் நிலையில், புற்றுநோய்க்கு முந்தைய நிலையில் அதை கண்டறிவதன் மூலம் 80 சதவீத நோயாளிகளை குணப்படுத்த முடியும்.

தடுப்பு மற்றும் சிகிச்சையில் உள்ள சவால்கள்

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.

குறைந்த விழிப்புணர்வு: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பு பற்றிய போதிய விழிப்புணர்வு, ஆரம்பகால HPV தடுப்பூசியின் நன்மைகள் குறித்து கிராமப்புற மக்களுக்கு சரிவரத் தெரிவதில்லை.

தடுப்பூசி போடுவதில் தயக்கம் மற்றும் கிடைக்காமை: தடுப்பூசி குறித்து பல்வேறு தவறான தகவல்களை பரப்புவதால் அதைப் போட்டுக்கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். மேலும் கிராமப்புறங்களில் அவை கிடைக்காததும் முக்கிய காரணங்களாக உள்ளன.

போதுமான பரிசோதனை திட்டங்கள் இல்லை: உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வு இல்லாததால், வழக்கமான மற்றும் பரவலான பரிசோதனைகள் செய்யப்படவதில்லை.

சுகாதாரப் பராமரிப்பு ஏற்றத்தாழ்வுகள்: நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே உள்ள மருத்துவ சிகிச்சைக்கான குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் மேம்பட்ட சிகிச்சையை பெறுவதற்கு தடையாக உள்ளன.

சிகிச்சை மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள்

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அவை வருமாறு:

நுண்துளையீட்டு சிகிச்சை: இந்த சிகிச்சை முறை மருத்துவமனையில் தங்கும் காலத்தையும் குணமடையும் காலத்தையும் வெகுவாக குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சிகிச்சை: இந்தப் புதிய சிகிச்சை முறை நல்ல விளைவுகளை வழங்குவதோடு, படிப்படியாக இந்தியாவில் எளிதில் அணுகக்கூடியதாகவும் ஒரு சிகிச்சையாகவும் மாறிவருகிறது.

கதிர்வீச்சு சிகிச்சை முறைகள்: பிராக்கிதெரபி போன்ற கதிர்வீச்சு சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், புற்றுநோய் திசுக்களை துல்லியமாக அழித்து, அதே நேரத்தில் ஆரோக்கியமான திசுக்களைக் காப்பாற்றுகின்றன.

ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான பொது சுகாதார ஆலோசனைகள்

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிப்பதற்கான வலுவான அணுகுமுறை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள்: தடுப்பூசி மற்றும் வழக்கமான பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, கலாச்சார ரீதியாக உணர்திறன் வாய்ந்த தகவல் பிரச்சாரங்கள் மிக முக்கியமானவை.

தடுப்பூசி திட்டங்களின் விரிவாக்கம்: குறைந்த விலையில் தடுப்பூசி கிடைப்பதை அரசு உறுதி செய்வதோடு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் ஆகும்.

பரிசோதனை முயற்சிகளை தீவிரப்படுத்துதல்: பாரம்பரிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த செலவில், பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சரியான சிகிச்சையை வழங்க முடியும்.

உள்கட்டமைப்பு மேம்பாடு: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை திறம்பட நிர்வகிக்க, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு, குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் பயிற்சி அளித்தல்.

கூட்டு முயற்சிகள் மற்றும் சமூக ஈடுபாடு

பல்வேறு மக்கள்தொகைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சுகாதார திட்டங்களை உருவாக்க, மருத்துவ நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் ஆகும்.

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ‘‘கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்க முடியும்” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் தடுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தின் பங்கு குறித்து நமக்கு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இந்த நோயைத் தடுப்பதற்கும், திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும் தேவையான வழிகளை அணுகுவதை உறுதி செய்ய வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் வராமல் தடுப்பதோடு பெண்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தையும் உருவாக்கலாம் என்று தெரிவித்தார்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post கர்ப்பப்பை புற்றுநோய் தடுக்கும் வழிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article