கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்!

4 weeks ago 5

நன்றி குங்குமம் டாக்டர்

கர்ப்ப காலம் என்பது, மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த ஒரு காலம்; ஆனால், சில பெண்களுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பகாலத்தில் இனப்பெருக்க உறுப்புகளில் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இது கர்ப்பிணிகள் இடையே அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகொண்டதாக மாற்றிவிடக்கூடும். கர்ப்பகாலத்தின்போது புற்றுநோயை சமாளித்துக் கடப்பது சிக்கலான ஒன்றே. தாயின் நலன் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் நலன் ஆகிய இரண்டுக்கும் இடையே நுட்பமான சமநிலையை பராமரிப்பதும் இதில் உள்ளடங்கும்.

கர்ப்ப காலத்தின்போது இவ்வகையான இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் புற்றுநோயை சமாளிப்பதில் உள்ள தனித்துவமான சவால்களையும் சிகிச்சை முறையையும் பகிர்ந்து கொள்கிறார் சென்னை அப்போலோ கேன்சர் சென்டரில் கதிர்வீச்சு புற்றுநோயியல் முதுநிலை மருத்துவர். ரத்னா தேவிகர்ப்பத்தின்போது இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் சிக்கல்கள் மற்றும் சவால்கள் கர்ப்பப்பை வாய், முட்டையகம் மற்றும் கருப்பைக்குள் புற்றுநோய் போன்ற இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்கள் கர்ப்பத்தின்போது கண்டறியப்படக்கூடும்.

இப்புற்றுநோய்கள், அரிதானவையாக இருப்பினும், ஒரு பெண்ணின் உடலுக்குள் உடல்சார்ந்த மாற்றங்களின் காரணமாக மற்றும் உருவாகி வரும் வளர்கருவின் இருப்பின் காரணமாக, தனித்துவமான சவால்களை முன்வைக்கிறது. அவற்றில், உரிய நேரத்தில் நோயறிதல் என்பது, மிக முக்கியமான சவால்களுள் ஒன்றாக இருக்கிறது. அடிவயிற்றுவலி, வயிறு வீக்கம் மற்றும் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள், கர்ப்பத்துடன் பொதுவாக தொடர்புடைய நிலைகளாக தவறாக புரிந்துகொள்ளக்கூடும்.

இத்தகைய தவறான கண்ணோட்டம், நோயறிதலை தாமதிக்க செய்வதனால், பல நேரங்களில் அதிக முதிர்ச்சியடைந்த நிலைகளிலேயே புற்றுநோயைக் கண்டறிவதற்கு வழிவகுக்கிறது. அதுமட்டுமின்றி, வளர்கருவிற்கான இடர்வாய்ப்பை குறைப்பதற்காக இமேஜிங் சோதனைகள் மற்றும் பயாப்சி எனப்படும் திசு ஆய்வு போன்ற குறிப்பிட்ட சில நோயறிதல் செயல்முறைகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

நோயறிதல் செய்யப்பட்டவுடன், சிகிச்சை திட்டமிடல் என்பது, சிக்கலானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. தாய் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தை ஆகிய இருவரின் பாதுகாப்பும் முதன்மை முக்கியத்துவம் பெறுகிறது. அறுவைசிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற புற்றுநோய்க்கான சிகிச்சைகள், கருவகத்திலுள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு அதுவும் குறிப்பாக, முதல் மூன்று மாத காலஅளவின்போது இடர்வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எடுத்துக்காட்டாக, மரபுவழி ஊனங்களுக்கான அதிக வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முதல் 12 வாரங்களின்போது கீமோதெரபி பொதுவாக தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், வளர்கருவிற்கான இடர்வாய்ப்பு குறைவாக இருக்கும்போது, அதாவது இரண்டாவது அல்லது மூன்றாவது மும்மாத காலஅளவின்போது சில சிகிச்சைகள் அதிக பாதுகாப்பானவையாக கருதப்படலாம்.

பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த பராமரிப்பு சிகிச்சை

இதில் இடம்பெற்றுள்ள சிக்கல்களின் காரணமாக, கர்ப்ப காலத்தின்போது இனப்பெருக்க உறுப்புகளிலுள்ள புற்றுநோய்களை நிர்வகிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களின் உதவி மிக முக்கியமானது. வழக்கமாகவே இக்குழுவில், மகப்பேறியல் மருத்துவர்கள், இனப்பெருக்கவியல் சார்ந்த புற்றுநோய் நிபுணர்கள், புற்றுநோய் மருத்துவர்கள், புற்றுநோய்க்கான கதிர்வீச்சியல் நிபுணர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர்கள் இடம்பெறுவார்கள். தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் சாத்தியமுள்ள சிறந்த விளைவுகளை உறுதிசெய்ய அனைவரும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்போடு ஒரு குழுவாக செயல்படுவார்கள்.

இதில் சிகிச்சைக்கான அணுகுமுறையும் அதிக பிரத்யேகமானதாக இருக்கும். புற்றுநோயின் வகை மற்றும் நிலை, கருவின் ஆயுட்காலம் மற்றும் நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நலம் போன்ற பல அம்சங்கள், நோயாளிக்காக ஒரு பிரத்யேக திட்டத்தை உருவாக்க பரிசீலிக்கப்படுகின்றன. சில நோயாளிகளுக்கு, பிரசவத்திற்கு பிறகு வரை சிகிச்சையினை தாமதிப்பது அல்லது தள்ளிப்போடுவது சாத்தியமானதாக இருக்கும்; குறிப்பாக, தொற்றுநோய் ஆரம்ப நிலையில் இருக்குமானால் மற்றும் மெதுவாக வளர்ச்சியடையுமானால் இது சாத்தியப்படும். பிற புற்றுநோய்களுக்கு உடனடி இடையீட்டு நடவடிக்கை அவசியமாக இருக்கும். புற்றுநோய்க்கு உடனடி சிகிச்சை மற்றும் வளர்கருவிற்கு பாதுகாப்பான அணுகுமுறை என்ற இரு தேவைகளுக்கும் இடையே சமநிலையைப் பேணுவது அவசியப்படலாம்.

எடுத்துக்காட்டாக, புற்றுநோயானது, ஓரிடத்தில் மட்டும் இருக்குமானால் மற்றும் அறுவைசிகிச்சையானது கருத்தரிப்பிற்கு மிகக் குறைவான இடரையே ஏற்படுத்துமானால், அறுவைசிகிச்சை செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படலாம். கீமோதெரபி தேவைப்படும் நேரங்களில், கருவில் வளரும் குழந்தைக்கு தீங்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கும். இரண்டாவது அல்லது மூன்றாவது மும்மாத காலஅளவின்போது இதை செய்ய திட்டமிடலாம். வளர்கருவிற்கு தீங்கை விளைவிக்கும் இதன் சாத்தியத்திறனின் காரணமாக, கண்டிப்பாக அவசியமாக இருந்தாலொழிய கதிர்வீச்சு சிகிச்சை வழக்கமாக தவிர்க்கப்படுகிறது.

உதாரணமாக, சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டது. அப்போது அவர், சந்தித்த சவால்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். சென்னையைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவர், இரண்டாவது குழந்தையை கருத்தரித்திருந்தார். கருவுற்று 18 வாரங்கள் ஆன நிலையில், அவருக்கு வழக்கத்திற்கு மாறான ரத்தப்போக்கு மற்றும் வலி இருப்பதை உணர்ந்தார். இதனால் அவருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில், இரண்டாம் நிலை கருப்பைவாய் புற்றுநோய் அவருக்கு இருப்பதாக தெரியவந்தது.

விரைவில் நிகழவிருக்கும் தாய்மைப்பேறு மறுபுறம் உயிருக்கு ஆபத்தான நோய் இந்த இரட்டை யதார்த்த நிலைகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ள கடும் சிரமப்பட்டார் அந்த பெண். உலகம் தலைகீழாக அவருக்கு மாறிப்போனது. பின்னர், அவரின் பாதிப்பை மதிப்பீடு செய்ய பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த மருத்துவர்கள் அடங்கிய ஒரு குழு உருவாக்கப்பட்டது. புற்றுநோயின் நிலை மற்றும் அமைவிடத்தின் அடிப்படையில், புற்றுக்கட்டியை அகற்ற அறுவை சிகிச்சையையும் மற்றும் குழந்தைக்கான இடரைக் குறைப்பதற்காக இரண்டாவது மும்மாத காலத்தின்போது இரண்டாவது கீமோதெரபி சிகிச்சையையும் மேற்கொள்ளலாம் என்று மருத்துவக் குழுவினர் ஆலோசனை வழங்கினர்.

அவரின் சிகிச்சைக் குழுவில் இடம் பெற்றிருந்த அவரது மகப்பேறியல் நிபுணர், கருவில் குழந்தையின் வளர்ச்சியை கவனமாக கண்காணித்து வந்தார். பச்சிளம் குழந்தைக்கான சிறப்பு மருத்துவர் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய கூடுதல் ஆதரவை வழங்கினார். அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையையும் மற்றும் அதையடுத்து கவனமாக திட்டமிடப்பட்ட சிகிச்சை நெறிமுறையையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சிகிச்சைக்காலம் முழுவதிலும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்குமிடையே நெருங்கிய ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருப்பது நிம்மதியையும், திருப்தியையும் அவருக்குத் தந்தது. பின்னர், புற்றுநோய் மற்றும் அவரது கர்ப்பம் ஆகிய இரண்டின் வளர்ச்சியின் அடிப்படையில், அவருக்கான சிகிச்சை திட்டத்தை அவ்வப்போது மாற்றங்களோடு திருத்தி அமைப்பதற்கு நிபுணர்கள் குழு தளர்வின்றி செயலாற்றியது. 36 வாரங்களில் ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார்.

அதன்பிறகு அவருக்கு இருந்த கர்ப்பவாய் புற்றுநோயும் தணிவடைந்தது. அதிக சவால்மிக்க சூழ்நிலைகளிலும் கூட, நம்பிக்கையும், மீண்டெழும் திறனும் இருக்குமானால் கடும் சிக்கல்களையும் வெற்றிகாணமுடியும் என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது.

உளவியல் ரீதியான ஆதரவின் முக்கியத்துவம்

கர்ப்ப காலத்தின்போது இனப்பெருக்க உறுப்புகளில் உருவாகின்ற புற்றுநோய்களினால் ஏற்படும் உணர்வுரீதியான பாதிப்பு மிகப்பெரியது.

அநேக நேரங்களில் தங்களது உடல்நலம் மற்றும் பிறக்கவிருக்கும் குழந்தையின் உடல்நலம் ஆகியவற்றின் மீதான கவலைகளோடு கலக்கம், அச்சம் மற்றும் தனிமை உணர்வு ஆகியவற்றை இப்பெண்கள் பெரும்பாலும் எதிர்கொள்கின்றனர். உளவியல் ரீதியிலான ஆதரவு, ஆலோசனை மற்றும் சக பாதிப்புள்ள நபர்கள் இடம்பெறும் குழுக்கள் ஆகியவை இத்தகைய உணர்வுரீதியான சவால்களை சமாளிக்க பெண்களுக்கு உதவுவதில் முக்கியமான பங்காற்றுகின்றன.

அவர்கள் மனதிலுள்ள அச்சங்கள் மற்றும் கவலைகள் பற்றி அவர்களது மருத்துவ பணியாளர்கள் குழுவோடு மனம் திறந்து பேச நோயாளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆற்றுப்படுத்துனர்கள் / கவுன்செல்லர்கள் அல்லது புற்றுநோயியலில் சிறப்பு கவனம் செலுத்தும் உளவியலாளர்கள் உட்பட, மனநல நிபுணர்கள் இந்த பயணத்தின்போது அப்பெண் நோயாளிகளுக்கு வழங்கமுடியும்.

ஆற்றல் மற்றும் ஆதரவின் ஒரு பயணம்

கர்ப்ப காலத்தின்போது இனப்பெருக்க உறுப்புகளில் உருவாகும் புற்றுநோயை நிர்வகிப்பது அதிக சவாலானது என்பதில் எந்த ஐயமும் இல்லை ; குழந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் தேவைகள் மீதும் கவனமான பரிசீலனை இதற்குத் தேவைப்படும். சிக்கலான இப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மருத்துவர்களின் கவனிப்பும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டமிடலும் இன்றியமையாதவை. சரியான ஆதரவும் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க மருத்துவக் குழுவும் இருக்குமானால், பிரியாவின் வாழ்க்கைக் கதையில் பார்ப்பதைப்போல இறுதியில் மகிழ்ச்சியளிக்கும் ஆக்கப்பூர்வ விளைவுகளைப் பெறுவது சாத்தியமே.

கர்ப்பம் மற்றும் புற்றுநோய் என்ற இரண்டும் கண்டறியப்படுகின்ற சூழலை எதிர்கொள்கின்ற பெண்களுக்கு, அவர்கள் தனித்து விடப்படுவதில்லை; அவர்கள் தனியாக இல்லை என்பதை உறுதி
யாக நம்புவது முக்கியம். சரியான சிகிச்சை பராமரிப்பு மற்றும் கனிவு மற்றும் வழிகாட்டலின் மூலம் நம்பிக்கையும், ஆற்றலும் துணை நிற்க இந்த சவால்களை அவர்களால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். தங்களது உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், இந்த உலகிற்கு ஒரு புதிய உயிரை கொண்டு வரவும் இயலும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

தொகுப்பு: ஸ்ரீதேவிகுமரேசன்

The post கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்! appeared first on Dinakaran.

Read Entire Article