லக்னோ: கர்னல் சோபியா குரேஷியை மத ரீதியாக விமர்சித்ததை தொடர்ந்து, விங் கமாண்டர் வியோமிகா சிங்கை சாதி ரீதியில் விமர்சித்த சமாஜ்வாதி கட்சி எம்பியின் சர்ச்சை கருத்தால், அரசியல் தலைவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை, ‘பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளின் சகோதரி; பாகிஸ்தானியர்களின் சகோதரி; பிரதமர் மோடி அவர்களது சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை வைத்து பாகிஸ்தானை பழிவாங்கிவிட்டார்’ என்று தெரிவித்தார். இவரது இந்த கருத்து, கர்னல் சோஃபியாவின் மத அடையாளத்தை இழிவுபடுத்துவதாகவும், பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், இதனை தாமாக முன்வந்து விசாரித்து, அமைச்சர் விஜய் ஷா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிவாரணம் கேட்டு அமைச்சர் விஷய் ஷா முறையிட்டுள்ளார். இதற்கிடையே மேற்கண்ட சர்ச்சைக்கு பதிலளித்த விஜய் ஷா, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், சோஃபியா குரேஷியை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறி, இதற்காக 10 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், உச்சநீதிமன்றம் இவரது கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அமைச்சராக இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியது. மேலும், இந்த வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சி, விஜய் ஷாவை பதவி நீக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ், இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் குறித்து சாதி அடிப்படையிலான கருத்து தெரிவித்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. மொராதாபாத் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய ஊடகங்களுக்கு பேட்டியளித்த வியோமிகா சிங், அரியானாவைச் சேர்ந்த ஜாடவ் (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பாஜக தலைவர்கள் அவரது சாதியை அறிந்திருந்தால் அவரையும் தாக்கியிருப்பார்கள். அவர்கள் (மத்திய பிரதேச அமைச்சர்) கர்னல் சோஃபியா குரேஷியை முஸ்லிமாக இருப்பதால் பாஜக அவமதித்தனர். வியோமிகாவை ராஜ்புத் என நினைத்து அவரை தாக்கவில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.
இவரது இந்த கருத்தும், ராணுவ வீரர்களை சாதி மற்றும் மத அடிப்படையில் பார்க்கும் மனநிலையை காட்டுவதால் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இவரது இந்த கருத்துக்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாதி எம்பியின் கருத்து அவமானகரமானது என விமர்சித்தார். ராணுவ பெண் அதிகாரிகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சை கருத்துகளை கூறி வருவது, அரசியல் கட்சிகளுக்கு இடையே மேலும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
The post கர்னல் சோபியா குரேஷியை தொடர்ந்து விங் கமாண்டர் வியோமிகா சிங்கை சாதி ரீதியில் விமர்சித்த சமாஜ்வாதி கட்சி எம்பி: அரசியல்வாதிகளின் சர்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் appeared first on Dinakaran.