புதுடெல்லி: கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சையாக பேசிய ம.பி. பாஜ அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள கூடாது என்ற வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அதிரடியாக கூறினர். காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பயங்கரவாதிகளின் கூடாரங்களை இரவோடு இரவாக அழித்தது. இதற்கு பழிதீர்க்க எண்ணிய பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. எனினும், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை முன்பே கணித்திருந்த இந்திய ராணுவம், அவற்றை வான் பாதுகாப்பு அழித்தொழித்து வெற்றி கண்டது.
இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்த்துக்கு பிறகு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தியுள்ளன. பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் தலைமையிலான இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருந்தது. இந்திய பெண்களின் குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளுக்கு, இந்திய பெண்கள் மூலமே இந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 2 பெண்களும் இணையத்தில் வைரலாகினர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம், மன்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று மாநில பாஜ அமைச்சர் கன்வர் விஜய் ஷா பேசும்போது, பஹல்காம் தாக்குதல் மூலம் நமது பெண்களை கைம்பெண்கள் ஆக்கியவர்களுக்கு பாடம் புகட்ட அவர்களது மதத்தை சேர்ந்த சகோதரியை இந்தியா அனுப்பியதாக பேசினார்.
மேலும், அவரது சில கருத்துக்கள் சர்ச்சையாகவும், ஆபாசமாகவும் இருந்த நிலையில், கடும் கண்டனங்கள் எழுந்தது. இவரது சர்ச்சைக்குரிய பேச்சு வைரலான நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதே நேரத்தில், அமைச்சர் குன்வார் விஜயை பதவி நீக்க வேண்டும் என்று பிரதமருக்கு கார்கே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே, தனது சர்ச்சை பேச்சுக்கு பாஜக அமைச்சர் கன்வர் விஜய் ஷா மன்னிப்பு கோரியிருந்தார். அவர், “நான் பேசியதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். நான் சோகத்துடன் பேசியபோது, சில ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தால் 10 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். மதத்தை தாண்டி நாட்டிற்கு சேவை செய்த சோபியா சகோதரியை என்னுடன் பிறந்த சகோதரியை விட அதிகமாக மதிக்கிறேன். ராணுவத்தையும் சோபியா சகோதரியையும் நான் வணங்குகிறேன்’ என்றார்.
அதேநேரம், அவதூறான, வகுப்புவாத மற்றும் பாலியல் ரீதியான கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் கன்வர் விஜய் ஷாக்கு கண்டனம் தெரிவித்த மத்தியப்பிரதேச உயர் நீதிமன்றம், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, கன்வர் விஜய் ஷா மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் விஜய் ஷா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மாசி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பிலான வழக்கறிஞர், ‘அமைச்சரின் கருத்து மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் இந்த சம்பவம் தொடர்பாக தார்மீக மன்னிப்பு கோரியுள்ளார்’ என்றார். இருப்பினும் நீதிபதிகள், ‘அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள கூடாது. ஒரு அமைச்சர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமானதா? வழக்கை நாளைக்கு விசாரணைக்கு எடுத்து கொள்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post கர்னல் சோபியா குரேஷி பற்றி சர்ச்சை பேச்சு; ம.பி. பாஜ அமைச்சருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: வழக்கு நாளை விசாரணை; நீதிபதிகள் அதிரடி appeared first on Dinakaran.