பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு வெடித்த மோதலுக்கு மத்தியில், பாறை போன்ற காங்கிரஸ் அரசு ஆட்டம் காண்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. டி.கே.சிவகுமாருக்கு 100 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. அப்போது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவியது.
கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த சிவகுமார், முதல்வர் பதவியின் வலுவான போட்டியாளராகக் கருதப்பட்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, காங்கிரஸ் மேலிடம் இருவரையும் சமாதானம் செய்தது. அதன்படி, சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவியேற்றனர். அப்போது, இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி பகிர்ந்து அளிக்கப்படும் என ஒரு உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்த உடன்பாட்டைச் செயல்படுத்தக் கோரி, டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும், மீதமுள்ள பதவிக்காலத்திற்கு டி.கே.சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சூழலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேச பெங்களூரு விரைந்துள்ளார்.
இந்த சந்திப்பிற்கு முன்பாகப் பேசிய டி.கே.சிவகுமாரின் தீவிர ஆதரவாளரான இக்பால் உசேன், ‘நான் மட்டும் மாற்றத்தை விரும்பவில்லை; 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக உள்ளனர். அவர் கட்சித் தலைவரான பிறகுதான் கட்சி பெரும் வளர்ச்சி அடைந்தது. அவரது கடின உழைப்புக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முதல்வர் மாற்றம் குறித்து சுர்ஜேவாலாவிடம் நிச்சயம் பேசுவேன். இப்போது இந்த மாற்றம் நிகழவில்லை என்றால், 2028 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இது கட்சியின் நலனுக்காக எடுக்கப்பட வேண்டிய முடிவு. முதல்வர் பதவி குறித்து மேலிடம்தான் முடிவெடுக்கும் என்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் கட்டுப்பாடு இருக்கிறது. நாங்கள் எப்போதும் மேலிடத்தை மதிக்கிறோம்; ஆனால் உண்மைகளைச் சொல்ல வேண்டும்’ என்றார்.
இருப்பினும், இந்த உட்கட்சிப் பூசலைச் சமாளிக்கும் விதமாக, சுர்ஜேவாலா தனது பயணம் குறித்துப் பேசுகையில், ‘கர்நாடகாவின் வளர்ச்சி மற்றும் கட்சியை வலுப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் மட்டுமே நடத்தப்படுகிறது. மாநில முதல்வர் மாற்றம் குறித்த செய்திகள் அனைத்தும் கற்பனையானவை’ என்றார். அதேபோல், முதல்வர் சித்தராமையாவும் இந்த விவகாரத்தை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘எங்களது அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் பாறை போல உறுதியாக இருக்கும்’ என்று கூறிய அவர், தனது அருகில் நின்றிருந்த டி.கே.சிவகுமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘நாங்கள் நல்லுறவில் உள்ளோம்; மற்றவர்கள் சொல்வதை நாங்கள் கேட்பதில்லை’ என்று கூறி ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார். இருந்தாலும், டி.கே.சிவகுமாரின் தீவிர ஆதரவாளரான இக்பால் உசேனின் கருத்து, கர்நாடக காங்கிரசில் மேலும் விவாதத்தை தூண்டியுள்ளது.
The post கர்நாடகாவில் முதல்வர் நாற்காலிக்கு வெடித்த மோதல்; பாறை போன்ற காங்கிரஸ் அரசு ஆட்டம் காண்கிறதா? டி.கே.சிவகுமாருக்கு 100 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.