5 ஆண்டாக வாழ்ந்துவிட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரம்; ‘லிவ்-இன்’ காதலி, தோழியின் 6 மாத குழந்தையை கழுத்து அறுத்துக் கொன்ற காதலன்: டெல்லியில் பயங்கரம்

3 hours ago 2


புதுடெல்லி: ெடல்லியில் ‘லிவ்-இன்’ காதலி, தோழியின் 6 மாத குழந்தையை கழுத்து அறுத்துக் கொன்ற காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டெல்லியைச் சேர்ந்த சோனல் (22) என்ற ெபண்ணும், நிகில் (29) என்ற ஆணும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 5 ஆண்டுகளாக ‘லிவ்-இன்’ உறவில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறுகள் காரணமாக, கடந்த 3 வாரங்களுக்கு முன் அவர்கள் தங்கள் உறவை முறித்துக்கொண்டு பிரிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சோனல், வடக்கு டெல்லி மஜ்னு கா திலா பகுதியில் வசிக்கும் தனது தோழியான ரஷ்மி, அவரது கணவர் துர்கேஷ் குமார் மற்றும் அவர்களது 5 வயது மற்றும் 6 மாத பெண் குழந்தை ஜசிகா ஆகியோருடன் தங்கியிருந்தார். ரஷ்மி, தனது வீட்டின் உரிமையாளரிடம் சோனலைத் தனது தங்கை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் சில நாட்கள் தங்குவார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே நிகில், அடிக்கடி இந்தப் பகுதிக்கு வந்து சோனலுடன் சண்டையிடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் ரஷ்மியும் அவரது கணவரும், தங்களின் மூத்த மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக வெளியே சென்றுள்ளனர். வீட்டில் சோனலும், குழந்தை ஜசிகாவும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு வீட்டிற்கு வந்த நிகிலை, வீட்டின் உரிமையாளர் மீரா தேவி பார்த்துள்ளார். அவர், ‘எதற்காக இங்கு வருகிறீர்?’ என்று கேட்டார். அதற்கு நிகில், ‘துர்கேஷிடம் இருந்து ஒரு பொருளை வாங்க வந்தேன்’ என்று கூறிவிட்டு மாடிக்குச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில், ரஷ்மியின் அலறல் சத்தம் கேட்டு மீரா தேவி மாடிக்கு ஓடிச் சென்று பார்த்தபோது, சோனலும், குழந்தை ஜசிகாவும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அங்கிருந்து நிகில் தப்பிவிட்டார்.

இந்த இரட்டைக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள நிகிலைப் பிடிக்கப் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரிந்து சென்ற ஆத்திரத்தில் சோனலைக் கொலை செய்திருக்கலாம் என்றாலும், பச்சிளம் குழந்தையைக் கொன்றதற்கான உண்மையான காரணம் என்ன என்பது நிகில் கைதான பிறகே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post 5 ஆண்டாக வாழ்ந்துவிட்டு பிரிந்து சென்றதால் ஆத்திரம்; ‘லிவ்-இன்’ காதலி, தோழியின் 6 மாத குழந்தையை கழுத்து அறுத்துக் கொன்ற காதலன்: டெல்லியில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article