
பெங்களூரு,
ரேபிடோ, உபேர் உள்ளிட்ட பைக் டாக்சிகளை கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் தடை செய்ய அம்மாநில ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
இதன்படி அடுத்த 6 வாரத்துக்குள் ரேபிடோ, ஓலா, உபர் போன்ற பைக் டாக்சி சேவைகளை கர்நாடகாவில் நிறுத்தவேண்டும் என இது தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஷ்யாம் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் அந்த மாநில அரசை 3 மாத காலத்திற்குள் பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் ஐகோர்ட்டு அவகாசம் கொடுத்துள்ளது.
இந்தத் தீர்ப்பு, பல மாதங்களாக சட்டப்பூர்வ ஆய்வுகளை எதிர்கொண்டுள்ள பைக் டாக்சி சேவைகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களுக்கு இணங்க இந்தத் தடை தேவை என்று அம்மாநில அரசாங்கம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.