கர்நாடகாவில் தொழிலதிபர் மாயம்.. சேதமடைந்த நிலையில் கார் கண்டுபிடிப்பு

3 months ago 20

மங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் மும்தாஜ் அலி. தொழிலதிபரான இவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.சி. பரூக் மற்றும் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மொகிதீன் பாவா ஆகியோரின் சகோதரர் ஆவார்.

இந்நிலையில், தொழிலதிபர் மும்தாஜ் அலி, இன்று அதிகாலையில் திடீரென காணாமல் போனார். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கினர். அப்போது, குலூர் பாலத்தின் அருகில் மும்தாஜ் அலியின் காரை போலீசார் கண்டுபிடித்தனர். காரின் முன்பகுதி சேதமடைந்திருந்தது. எனவே, விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால், காருக்குள் அவர் இல்லை. வேறு எங்கும் சென்றதாகவும் தகவல் கிடைக்கவில்லை. எனவே, பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினர், ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபற்றி மங்களூர் போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கூறுகையில், "அதிகாலை 3 மணியளவில் மும்தாஜ் அலி தனது வீட்டில் இருந்து காரில் கிளம்பியிருக்கிறார். 5 மணி வரை நகரின் பல்வேறு இடங்களில் சுற்றிய அவர், குலூர் பாலத்தின் அருகே காரை நிறுத்தியிருக்கிறார். காரில், விபத்துக்கான அடையாளங்கள் இருந்தன. அதன் பிறகு, அவரது மகள், காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவரை தேடும் பணி நடைபெறுகிறது. அநேகமாக அவர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்திருக்கலாம்" என்றார்.

Read Entire Article