
பெங்களூரு,
கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையா, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக அரசு ரூ.160 கோடியை செலவு செய்திருந்தது.
கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை முதல்-மந்திரி சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார். ஆனால் அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அன்றைய தினம் அந்த அறிக்கை குறித்து மந்திரிசபை கூட்டத்தில் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. அறிக்கையின் நகல் அனைத்து மந்திரிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை பற்றி ஆராய்ந்து தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி மந்திரிகளுக்கு முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டார். அதே நேரத்தில் இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பெங்களூருவில் ஏப்ரல் 17-ந் தேதி (அதாவது இன்று) மந்திரிசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த மந்திரிசபை சிறப்பு கூட்டத்தில் வேறு எந்த ஒரு விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படாது என்றும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை பற்றி மட்டுமே விரிவாக ஆலோசிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு விதானசவுதாவில் இன்று மாலை 4 மணிக்கு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் மந்திரிசபை சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.