* ஒன்றிய அரசு தொடர்ந்து வஞ்சிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு
சென்னை: தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலை துறை மாநிலத்தில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைவாக இலக்கை அடைய பல்வேறு நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தணிச்சையாகவும், மாநில அரசுடன் இணைந்தும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூருவை இணைக்கும் வகையில் 262 கீ.மீ. நீளத்திற்கு பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் 2022ம் ஆண்டு சென்னை- பெங்களூரு விரைவு சாலை தொடங்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழி சாலைகளில் இதுவும் ஒன்றாகும். சென்னை மற்றும் பெங்களூருவுக்கு இடையே தற்போது இரண்டு வழிகள் உள்ளது.
அதில் சென்னையில் இருந்து கோயம்பேடு, பூந்தமல்லி, பெரும்புதூர், வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சந்தபுரா, எலக்ட்ரானிக் சிட்டி வழியாக பெங்களூருவுக்கு 372கி.மீ. நீளமுள்ள என்.எச் 48 தேசிய நெடுஞ்சாலை, அதேபோல கோயம்பேடு, பூந்தமல்லி, பெரும்புதூர், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, சித்தூர், முல்பகால், ஓசகோட்டே வழியாக பெங்களூருவுக்கு 335கி.மீ. நீளமுள்ள என்.எச்.75 தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. தற்போது அமைக்கபட்டு வரும் விரைவு சாலை தற்போதுள்ள இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே அமையவுள்ளது. பெங்களூருவுக்கு வெளியே உள்ள ஓசகோட்டே மற்றும் சென்னைக்கு வெளியே உள்ள பெரும்புதூர் இந்த விரைவு சாலையின் நிறைவு இடங்களாக இருக்கும். ராணிப்பேட்டை, சித்தூர், பங்காருபாளையம், பலமனேர், கோட்டா, வெங்கட்டகிரி, கோளார், பங்கார்பெட், மாலூர் வழியாக இந்த விரைவு சாலை செல்கிறது.
தற்போது சென்னையில் இருந்து பெங்களுரு செல்ல 5 முதல் 6 மணி நேரம் வரை ஆகும் நிலையில், இந்த விரைவு சாலையில் 262 கிலோ மீட்டர் தூரத்தை 2 முதல் 3 மணி நேரத்தில் சென்றடையலாம். இந்த விரைவு சாலை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என மூன்று மாநிலங்களை இணைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் கர்நாடகாவில் சாலை பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் மேற்கொள்ளப்படும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் தமிழத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் மிகவும் தாமதமாகவே மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தற்போது வரை ஒப்பந்தம் மட்டுமே கோரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டமானது அடுத்தாண்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை- பெங்களூரு விரைவு தேசிய நெடுஞ்சாலையில் பெரும்புதூர் முதல் காரப்பேட்டை வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலை அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டது.
தற்போது இந்த ஒப்பந்தம் இரண்டாவது முறையாக ரத்தாகியுள்ளது. தற்போது மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த திட்டத்திற்கு ரூ.341 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2 மேம்பாலங்கள், 16 சுரங்கப்பாதை உட்பட 6 வழிச்சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 வழிச்சாலையாக அமைக்க திட்டமிட்டடிருந்த நிலையில் 2019க்கும் பிறகு 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அதேபோல் சென்னை பெங்களூரு இடையேயான கே.ஜி.எப் வழியாக செல்லும் சாலையில் மேற்கொள்ளப்படும் பணிகள் தாமதம் ஏற்படுகிறது. இந்திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் கூறியதாவது : பெரும்பத்தூரிலிருந்து ராணிப்பேட்டை வரை செல்லும் சாலையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
குறிப்பாக சாலையில் எந்த இடங்களில் அறிவிப்பு பலகைகள், மின்விளக்கு, சாலை தடுப்புகள் உள்ளிட்டவை எதும் முறையாக அமைக்கப்படவில்லை. சர்வீஸ் சாலைக்கு செல்லும் பாதைகளும் முறையாக அமைக்கப்படவில்லை. இதுவரை ஆண்டுக்கு 110க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெறுகிறது. பெரும்பத்தூர், காஞ்சிபுரம் உள்ள சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ரூ.140 கோடி வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் இந்த சாலை மிகவும் மேசமான நிலையில்தான் உள்ளது. இதனால் சாலை விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது வடிக்கையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் சாலை பணிகள் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 2வது முறையும் ஒப்பந்தம் ரத்து: சுங்கச்சாவடி வசூலில் மட்டுமே மும்முரம் appeared first on Dinakaran.