பெங்களூரு,
நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உள்ளிட்டோரின் ரூ.300 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மீதான நில முறைகேடு குறித்து நடைபெற்ற விசாரணையில் சில ரியல்எஸ்டேட் அதிபர்கள், ஏஜெண்டுகளுக்கு பினாமி பெயரில் சட்டவிரோதமாக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த ரியல்எஸ்டேட் அதிபர்கள், ஏஜெண்டுகள், பினாமி பெயரில் வைத்திருந்த 142 அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.
சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா சார்பில் மைசூரு விஜயநகரில் 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது பெயரில் இருந்த 3 ஏக்கர் 16 சென்ட் நிலத்தை மூடா கையகப்படுத்தியதற்கு பதிலாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. மூடாவால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 700 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலத்திற்கு பதிலாக பார்வதிக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளின் மதிப்பு ஏறக்குறைய ரூ.56 கோடி ஆகும். முதல்-மந்திரி சித்தராமையா தன்னுடைய அரசியல் பலத்தை காட்டி 14 வீட்டுமனைகளை பெற்றுள்ளார்.
அதுபோல் தான் மூடாவில் ரியல்எஸ்டேட் அதிபர்கள், ஏஜெண்டுகள், பினாமி பெயரிலான நபர்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த வீட்டுமனைகள் முன்னாள் மூடா கமிஷனர் தினேஷ்குமார் பதவிக்காலத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் பணம் கூட்டுறவு வங்கிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீட்டுமனைகளை தான் அமலாக்கத்துறை கண்டறிந்து முடக்கியுள்ளது. அதாவது அந்த வீட்டுமனைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததன் மூலமாக கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைமாறி உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.