பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில், பூந்தமல்லி டிரங்க் சாலை, ஆவடி பிரதான சாலை, பக்கிங்ஹாம் சாலை ஆகியவற்றை இணைக்கும் நான்கு முனை சந்திப்பு அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், நான்கு சாலைகளிலும் தங்களது வாகனங்களை நிறுத்துவதாலும், ஆங்காங்கே ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் போக்குவரத்து பெண் போலீஸ் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த ஆட்டோ ஒன்று சீருடையில் இருந்த பெண் போலீஸ் என்றும் பாராமல் அவரை இடிப்பது போல் சென்று அவரது காலில் ஆட்டோவின் முன் சக்கரத்தை ஏற்றியபடி நின்றது. இருப்பினும் விடாப்படியாக பெண் போலீஸ் அந்த ஆட்டோவின் முன்னால் சென்று கைகளால் ஆட்டோவை தடுத்து மடக்கி நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் பெண் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஆட்டோ டிரைவரிடம் ஆவணங்களை காட்டுமாறு கேட்டார். அப்போது லைசென்ஸை எடுத்துக்காட்டுவதற்கு பதிலாக அந்த ஆட்டோ டிரைவர், போலீஸ் அடையாள அட்டையை எடுத்து காண்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பெண் போலீஸ் அந்த ஆட்டோ டிரைவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். இந்த பகுதியில் ஆட்டோ டிரைவர்களின் அட்டகாசத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் விதிமுறைகளை மீறி பல்வேறு ஆட்டோக்கள் இந்த பகுதியில் சென்று வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
The post கரையான் சாவடி சந்திப்பு அருகே போக்குவரத்து பெண் போலீஸ் மீது ஆட்டோவை மோதி விபத்து appeared first on Dinakaran.