கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாய சங்கம் நன்றி

3 weeks ago 6

போளூர்: கரும்புக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தென்னிந்திய கரும்பு விவசாய சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு திராவிட மாடல் அரசு உத்தரவிட்டுள்ளது.

2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகையை சேர்த்து விவசாயிகள் ரூ.3,134 பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரும்பு ஒரு டன்னுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,919.75 உடன் மாநில அரசின் ஊக்கத்தொகையான ரூ.215ஐ சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும். இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும், 2023-24 அரவைப் பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு, சர்க்கரைத்துறை இயக்குநர் அலுவலகத்தால் கூர்ந்தாய்வு செய்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கியுள்ள தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கரும்புக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாய சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article