சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிட்டு, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் கரும்பு நிலுவைத் தொகை 97.77 கோடி ரூபாய் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிட்டு, நிலுவைத்தொகை பெற்று பயனடைந்த திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, நாமக்கல், சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார், என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றுள், 2024-25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள்அரவைப் பணி மேற்கொண்டுள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2024-25 அரவைப் பருவத்தில் 15.05.2025 வரை 18.81 இலட்சம் மெ.டன் அரவை செய்து, 8.40 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 1.58 இலட்சம் மெ.டன் சர்க்கரை உற்பத்தி செய்துள்ளன.
அரவை மேற்கொண்ட 12 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கள்ளக்குறிச்சி-1, கள்ளக்குறிச்சி-2, சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர் ஆகிய 4 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் அறிஞர் அண்ணா, பெரம்பலூர் ஆகிய 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 10.30 இலட்சம் மெ.டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய 329.34 கோடி ரூபாயை தங்கள் ஆலையின் சொந்த நிதியிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு தொகையை வழங்கி உள்ளன.
பின்வரும், மோகனூர், தர்மபுரி, வேலூர், செங்கல்வராயன், திருத்தணி, எம்.ஆர்.கே., செய்யார், மதுராந்தகம் ஆகிய 8 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தாங்கள் கொள்முதல் செய்து, அரவை செய்த 8.51 இலட்சம் மெ.டன் கரும்பிற்கு வழங்க வேண்டிய 272.87 கோடி ரூபாயில் 175.10 கோடி ரூபாய் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தங்கள் சொந்த நிதியிலிருந்து வழங்கியது போக ஆலையின் நிதி ஆதாரம் இல்லாத காரணத்தினால் நிலுவையாக 97.77 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்காமல் வைத்திருந்தன.
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனை பாதுக்காக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 5920 விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழிவகைக் கடனாக 97.77 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இந்த நிதியுதவி கொண்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த நிகழ்வின்போது, சுற்றுலாத் துறை அமைச்சர்
ஆர்.ராஜேந்திரன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., சர்க்கரைத் துறை ஆணையர் அன்பழகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடியை விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்..!! appeared first on Dinakaran.