கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக இருப்பதால் டெல்லி முதல்வர் பதவிக்கு பாஜகவில் ‘பில்டப்’ கொடுக்கும் 6 தலைகள்: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு

2 hours ago 1

புதுடெல்லி: ெடல்லி தேர்தல் கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதால் முதல்வர் பதவிக்கு 6 பேரிடையே போட்டா போட்டி நிலவுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி சட்டப் பேரவை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்ற நிலையில், நாளை (பிப். 8) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மொத்தமுள்ள 70 ெதாகுதிகளிலும் போட்டியிட்ட 699 வேட்பாளர்களின் எதிர்காலம் நாளை முற்பகலுக்குள் தெரிந்துவிடும். ஆளும் ஆம்ஆத்மி – பாஜக இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், கேம்சேஞ்சராக காங்கிரஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்றும் என்றும், ஆம்ஆத்மி குறைந்தது 19 இடங்களில் (முந்தைய வெற்றியை காட்டிலும்) தோற்கும் என்றும், காங்கிரசுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மீண்டும் பாஜக டெல்லியை கைப்பற்றும் என்று கூறப்படுவதால், ெடல்லி பாஜகவின் மூத்த தலைவர்கள் அனைவரும் முதல்வர் பதவிக்கு கனவு கண்டு வருகின்றனர். பல தலைவர்களின் தங்களின் உடல் மொழியை மாற்றிக் கொண்டு ‘பில்டப்’ கொடுத்து வருகின்றனர். ஆனால் டெல்லி முதல்வர் யார்? என்பதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்றும் கூறுகின்றனர். இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘டெல்லியின் புதிய முதல்வர் பதவிக்கு டெல்லி பாஜக தலைவர் வீரேந்தர் சச்சதேவா, எம்.பி மனோஜ் திவாரி, கெஜ்ரிவாலுக்கு எதிராக புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட பிரவேஷ் வர்மா ஆகிய மூன்று பேரின் பெயர்கள் அடிபடுகிறது. இவர்கள் பெயர்கள் யாவும் வெறும் ஊகம் மட்டுமே. உதாரணமாக, மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியானாலும் கூட நீண்ட இழுபறிக்கு பின்னர் தான் அறிவிக்கப்பட்டது.

ஆனால், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்த பின்னர், அம்மாநிலங்களின் முதல்வர் யார்? என்பது பெரும் கேள்வியாக இருந்தது. பல்வேறு ஊகங்கள் வெளியாகின. ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பெயர்கள் முதல்வர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மத்தியப் பிரதேசத்தில் மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா பெயரும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. ஆனால் மோகன் யாதவ் என்பவர் முதல்வரானார். ராஜஸ்தானில் ராஜ பரம்பரரையை சேர்ந்த தியா குமாரிக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் பஜன் லால் சர்மா முதல்வராகவும், துணை முதல்வராக தியா குமாரியும் தேர்வு செய்யப்பட்டனர். இவ்விசயத்தில் வசுந்தரா ராஜேவுக்கு எவ்வித பதவியும் கொடுக்கப்படவில்ைல. சிவராஜ் சிங் சவுகான் ஒன்றிய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். சட்டீகரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் விஷ்ணுதேவ் சாய் முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

இவ்வாறாக ஜாதி, இன அடிப்படையில் பாஜகவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முதல்வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். டெல்லியில் முதல்வராக மனோஜ் திவாரி, வீரேந்திர சச்சதேவா, பிர்வேஷ் வர்மா ஆகியோரின் பெயர்களில் ஒருவரை இறுதி செய்யப்படவில்லை என்றால், இவர்களில் 2 பேர் துணை முதல்வராக பதவியேற்க வாய்ப்புள்ளது. அதேநேரம் டெல்லியில் பெண் ஒருவரை முதல்வராக்குவதற்கான சூழல்களும் உள்ளன. அந்த பட்டியலில் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, மீனாட்சி லெகி, மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளான எம்பி பன்சூரி ஸ்வராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெண்கள் அதிகளவு ஆதரவு அளிப்பதால், அவர்களை கவருவதற்காக பெண் ஒருவரை முதல்வராக்கும் திட்டமும்
உள்ளது’ என்று கூறினர்.

 

The post கருத்துக்கணிப்பு முடிவுகள் சாதகமாக இருப்பதால் டெல்லி முதல்வர் பதவிக்கு பாஜகவில் ‘பில்டப்’ கொடுக்கும் 6 தலைகள்: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article