மகாகும்ப் நகர்: உபி மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 40 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர். உபி,பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. பிப்ரவரி 26 ம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறவுள்ள மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடி வருகின்றனர். இந்த நிலையில் கும்பமேளாவில் 40 கோடிக்கும் மேலான பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உபி அரசு நேற்று தெரிவித்துள்ளது.
கும்பமேளாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்,ச மாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோர் புனித நீராடியுள்ளனர். மேலும்,பாலிவுட் நடிகை ஹேமமாலினி, நடிகர் அனுபம் கேர், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராரங்கனை சாய்னா நெஹ்வால் உள்ளிட்டோரும் கும்பமேளாவில் புனித நீராடினர். நேற்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆகியோர் புனித நீராடினார்கள். ஜனாதிபதி திரவுபதி முர்முவும் கும்பமேளாவை காண பிரயாக்ராஜ்க்கு நாளை வர உள்ளார்.
* முகாமில் தீ
இதனிடையே பிரயாக்ராஜில் உள்ள மகா கும்ப் நகரில் இஸ்கான் அமைப்பினரின் தற்காலிக கூடாரத்தில் நேற்று பயங்கரமாக தீப்பற்றி பக்கத்தில் உள்ள முகாம்களுக்கும் பரவியது. இது பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
The post மகா கும்பமேளாவில் 40 கோடி பேர் புனித நீராடினர்: உபி அரசு தகவல் appeared first on Dinakaran.