
நாக்பூர்,
90-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் விதர்பா - கேரளா அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா தனது முதல் இன்னிங்சில் 123.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
விதர்பா தரப்பில் அதிகபட்சமாக டேனிஷ் மலேவர் 153 ரன் எடுத்தார். கேரளா தரப்பில் நித்தேஷ், ஈடன் ஆப்பிள் டாம் தலா 3 விக்கெட்டும், பாசில் 2 விக்கெட்டும், ஜலஜ் சக்சேனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கேரள அணி நேற்றைய 3வது நாள் முடிவில் 125 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 342 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
கேரளா தரப்பில் அதிகபட்சமாக சச்சின் பேபி 98 ரன்கள் எடுத்தார். விதர்பா தரப்பில் ஹார்ஷ் துபே, தர்ஷன் நல்கண்டே, பார்த் ரகடே ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதன் காரணமாக விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்நிலையில், இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் 37 ரன் முன்னிலையுடன் விதர்பா அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.
விதர்பாவின் தொடக்க வீரர்களாக பார்த் ரகடே மற்றும் துருவ் ஷோரே களம் இறங்கினர். இதில் பார்த் ரகடே 1 ரன்னிலும், துருவ் ஷோரே 5 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து டேனிஷ் மலேவர் மற்றும் கருண் நாயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் டேனிஷ் மலேவர் 73 ரன்னிலும், அடுத்து வந்த யாஷ் ரத்தோட் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து அக்சய் வட்கர் களம் கண்டார். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் 4ம் நாள் முடிவில் விதர்பா தனது 2வது இன்னிங்சில் 90 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
விதர்பா தரப்பில் கருண் நாயர் 132 ரன்னுடனும், அக்சய் வட்கர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் பெற்ற 37 ரன் முன்னிலையுடன் சேர்த்து விதர்பா இதுவரை 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டம் டிராவில் முடிவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை அடிப்படையில் விதர்பா சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.