
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்பொழுது ஜீனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34-வது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.எம் 34' எனப்பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சமீபத்தில், 'ஆர்.எம் 34' படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. அதன்படி, இப்படத்திற்கு 'கராத்தே பாபு' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தவ்தி ஜிவால் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரவி மோகன் அரசியல்வாதி மற்றும் கராத்தே மாஸ்டராகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், கராத்தே பாபு திரைப்படத்தில் நடிகர் சக்தி வாசுதேவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.மேலும், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் சக்தி வாசுதேவன் "பாக்சர் செல்வராஜ்" என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. மேலும், படக்குழு சார்பில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சக்தி வாசுதேவன் தனது தந்தை பி வாசுவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். நடிகன், சின்ன தம்பி, செந்தமிழ் பாட்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக சக்தி நடித்துள்ளார். 'தொட்டால் பூ மலரும்' படத்தில் கதாநாயகனாக சக்தி அறிமுகமானார்.