2வது டி20; அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜிம்பாப்வே

4 hours ago 1

ஹராரே,

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வேவும் கைப்பற்றின. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நேற்று தொடங்கியது.

நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 46 ரன் எடுத்தார்.

ஜிம்பாப்வே தரப்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த ஜிம்பாப்வே அணியும் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜிம்பாப்வே தரப்பில் பிரையன் பென்னட் 8 ரன்னிலும், மருமானி 1 ரன்னிலும், மாதவேரே 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து களம் கண்ட டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

மறுபுறம் தஷிங்கா முசேகிவா 15 ரன், மசகட்சா 6 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஜிம்பாப்வே 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் டோனி முன்யோங்கா 43* ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.

Read Entire Article