
சென்னை,
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடு லோஹர். இவர் கடந்த 2021ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான 'முகில்பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, 2022ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த 'அல்லூரி' மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். கடந்த பிப்ரவரி 21ம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பிலும் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் வெளியான திரைப்படம் தான் 'டிராகன்'.டிராகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் சமூக வலைதளங்களில் அதிகம் தேடும் நடிகையாக மாறிவிட்டார்.
ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் 'இதயம் முரளி' திரைப்படத்தில் கயாடு நடித்து வருகிறார். அதர்வாவுடன் இணைந்து ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் கயாடு லோஹர், 'இதயம் முரளி' படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். கயாடு பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை படக்குழு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது.