கயத்தாறு, ஜன. 12: கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோயிலில் எஞ்சியுள்ள பணிகளும் முடிக்கப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டும் என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு நகரின் மையப்பகுதியில் திருநீலகண்ட ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலுக்கு முத்துகிருஷ்ணேஸ்வரர் கோயில் என மற்றொரு பெயரும் உண்டு. கயத்தாறை தலைநகரமாகக் கொண்டு கடந்த 1300 ஆண்டுகளுக்கு முன்பு அரசாண்ட முத்துக்கிருஷ்ண பாண்டியன் என்ற சிற்றரசன், தனது அரசாட்சி காலத்தில் இவ்வூரின் நடுப்பகுதியில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய இத்திருக்கோயிலை அமைத்தார்.
இக்கோயிலில் முத்து கிருஷ்ணேஸ்வரர், திருமலைநாயகி சன்னதிகளும், தட்சணாமூர்த்தி, சுப்பிரமணியர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. முதன்மைத் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள. பழம் பெருமை வாய்ந்த இக்கோயிலின் பல்வேறு பகுதிகள், குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்கள் மற்றும் சுற்றுச்சுவர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சீர் செய்து கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு முன்னாள் அமைச்சரான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ முயற்சியால் 5 நிலைகள் கொண்ட இவ்வாலயத்தின் ராஜகோபுரங்களை பழுதுபார்த்து புதுப்பித்தல் பணிக்கு ரூ.97.50 லட்சம்,
கோயில் பிரகார மண்டபம் மற்றும் மடப்பள்ளி மேல்தளம் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.17 லட்சம், கோயில் சன்னதிகள் மற்றும் மண்டபங்கள் கருங்கல் சுவர்கள் பழுதுபார்த்து சீரமைத்தல் பணிக்கு ரூ.7.37 லட்சம், கோயில் மண்டபங்களில் தற்போது உள்ள கல் தளத்தை சீரமைத்தல் பணிக்கு ரூ.7.40 லட்சம், மதில் சுவர்கள் பழுதுபார்த்தல் பணிக்கு ரூ.2.92 லட்சம், சன்னதிகள் மற்றும் கல் மண்டபங்கள் தண்ணீர் மூலம் சுத்தம் செய்தல் பணிக்கு ரூ.1.90 லட்சம் என மொத்தம் ரூ.1.34 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கி நடந்துவந்த நிலையில் கொரானோ ஊரடங்கால் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது.
பின்பு ஊரடங்கு விலக்கப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்தது. சுண்ணாம்பு, மணல், கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை பயன்படுத்தி பண்டைய முறைப்படி கோபுரபூச்சு பணிகள் ஸ்தபதி மாரியப்பன் தலைமையில் ராமமூர்த்தி மேற்பார்வையில் நடந்துவந்தன. ஆனால் தற்போது பணிகள் நடைபெறாமல் திட்டமிடப்பட்ட காலத்தை கடந்த பின்பும் பணிகள் முடிவு பெறாமல் இருக்கிறது. அரசு இவ்வாலய பணியில் சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து செயல்பட்டு ஆலய குடமுழுக்கு நடத்த ஆவனசெய்ய வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் கேள்விக்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்னும் சில மாதத்திற்கு உள்ளாக கோவிலின் திருப்பணிகள் முடிவுற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவித்தார். கயத்தாறின் அடையாளமாக விளங்கும் திருநீலகண்ட ஈஸ்வரர் ஆலயத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது என்ற செய்தி கயத்தாறு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.