
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் சுப்மன் கில் தலைமையிலான முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் அணியின் இந்த வெற்றிகளுக்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான இந்திய முன்னாள் வீரர் ஆஷிஸ் நெஹ்ரா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். போட்டிகளின்போது ஒவ்வொரு ஓவருக்கும் இடையே வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதனால் இவரது தலைமையில் இளம் வீரர்களை கொண்ட குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போதைய சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட நெஹ்ரா சரியானவர் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணிக்கு நெஹ்ராவை விட சிறந்த பயிற்சியாளர் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். இந்திய அணியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? என்று பி.சி.சி.ஐ. அவரிடம் கேட்க வேண்டும். ஆனால் அவர் அவ்வளவு நேரம் ஒதுக்க முடியாது என்பதால் ஒப்புக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அவரை விட சிறந்த தேர்வு இல்லை.
குஜராத் அணியில் அவர் இணைந்த நாளிலிருந்து, முழு மூச்சாக உழைத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த அணி தயாராக வருகிறது. இடது கை சுழற்பந்து வீச்சாளர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச முடியாது, அல்லது ஒரு ஆப்-ஸ்பின்னர் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்து வீச முடியாது என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் ஆஷிஸ் நெஹ்ராவின் பந்து வீச்சாளர்கள் இதையெல்லாம் வெற்றிகரமாக செய்திருக்கிறார்கள். இது அனைத்தும் மனநிலையைப் பற்றியது, இதைத்தான் ஆஷிஸ் நெஹ்ரா கொண்டு வருகிறார்"என்று கூறினார்.