கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர் ரகுமான் வெளியிட்ட பாடல் வீடியோ

3 months ago 23

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (வயது 59) களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தற்போது இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தேர்தலில் திரைத்துறையினர், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் வெளிப்படையாக டிரம்ப் அல்லது கமலாவுக்கான தங்கள் ஆதரவை தெரிவித்து, பிரசாரமும் செய்து வருகின்றனர். குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். அதே போல், இசையமைப்பாளர் கிட் ராக், மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், ராப் பாடகர் ஆம்பர் ரோஸ் உள்ளிட்டோர் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் பிரபல பாடகிகள் டெய்லர் ஸ்விப்ட், பியான்ஸே, கேட்டி பெர்ரி, ஆஸ்கார் விருது வென்ற பாடகி பில்லி ஐலிஷ், அவரது சகோதரர் பின்னியாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளாராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விழாவில் இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாக உள்ளது. ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பான ஏ.ஏ.பி.ஐ.(AAPI) இதுகுறித்த அறிவிப்பையும், டீசர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இந்திய மற்றும் ஆப்பிரிக்க பாரம்பரியத்தில் இருந்து வந்த கமலா ஹாரிசை ஆதரிக்கும் தெற்காசியாவின் முதல் முக்கிய சர்வதேச கலைஞர் ஏ.ஆர்.ரகுமான் ஆவார். கமலா ஹாரிசின் தேர்தல் பிரசாரத்திற்கு ஆதரவாக பிரத்யேகமாக 30 நிமிட இசைக்கச்சேரி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற சில பாடல்கள், அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸ் பற்றிய குறிப்புகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ நேற்று யூடியூபில் வெளியாகியுள்ளது.

அதில் ஏ.ஆர் ரகுமான் கமலா ஹாரிஸ் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "ஒரு தெற்காசிய தமிழனாக உலகத்தை சிறந்த இடமாக மாற்ற கமலா ஹாரிஸ் முற்படுகிறார். அவரின் அர்பணிப்பை கண்டு நான் மிகவும் பெருமைப் படுகிறேன். அதோடு முதல் பெண் அதிபரை பார்க்க இருக்கிறோம். அவர் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்" என்றார்.

பின்பு அவர் இசையமைத்த பிரபலமான பாடல்களை பாடினார். இதில் 'ஜெய் ஹோ', 'சிங்கப் பெண்ணே' உள்ளிட்ட பாடல்களும் இடம்பெற்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் களமிறங்கியது அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்குகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article