கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்று போற்றப்படும் வ.உ.சி அவர்களின் நினைவுநாள் நவம்பர் 18. இந்த நாளில் அவர் நாட்டுக்குச் செய்த அரும்பணிகளை நினைவுகூர்ந்து மேற்கண்ட அடைமொழிகள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன என்பதை அறிந்துகொள்வோம்.
வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் என்பதே அவரின் முழுப்பெயர். அதனைச் சுருக்கி வ.உ.சி என்று குறிப்பிடுகிறோம். 1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் உலகநாதன், பரமாயி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். அப்போது ஊர்கள் தோறும் திண்ணைப் பள்ளிகள்தான் வழக்கத்தில் இருந்தன. எனவே, வ.உ.சி ஆறு வயதில் வீரப்பெருமாள் அண்ணாவி என்ற தமிழாசிரியரிடம் தமிழும், கிருஷ்ணன் என்ற அரசு அலுவலரிடம் ஆங்கிலமும் கற்றுக்கொண்டார்.
நாடு விடுதலை பெற்றால் மட்டும் போதாது. நாட்டு மக்கள் பொருளாதாரத்திலும் விடுதலை பெற வேண்டும், என்று சிந்தித்தவர் வ.உ.சி ஆங்கிலேயர்கள் வணிகம் செய்யவே இந்தியாவுக்கு வந்தனர். பிறகு நம்மை ஆளத்தொடங்கினர். அவர்களை எதிர்க்க வேண்டுமெனில், அவர்களின் வணிகத்தை எதிர்க்க வேண்டும், என்று சிந்தித்தார் வ.உ.சி வணிகத்திற்கு மிகவும் அடிப்படையானது போக்குவரத்து. அப்போது கப்பல் போக்குவரத்தே அதிகமாகப் பயன்பட்டது. பிரிட்டிஷ் நேவிகேஷன் நிறுவனம் ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கே துணை நின்றது. இதனை உற்றுநோக்கிய வ.உ.சி இந்தியர்களுக்கென்று ஒரு கப்பல் நிறுவனத்தை தொடங்க நினைத்தார். நாடெங்கும் அலைந்து முதலீடுகளைச் சேகரித்து 1906ஆம் ஆண்டு சுதேசி நாவாய் சங்கம் என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்.
ஆனால் நிறுவனத்திற்குச் சொந்தமாகக் கப்பல் இல்லை. எனவே, கப்பலை வாடகைக்கு எடுப்பது என்று முடிவு செய்தார். இதனை அறிந்த பிரிட்டிஷ் நிறுவனம் தங்களுக்குப் போட்டியாக ஒரு கப்பல் நிறுவனம் உருவாவதை விரும்பவில்லை. எனவே, வ.உ.சிக்குக் கப்பலை வாடகைக்கு விடும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தனர். ஆனால், கொஞ்சமும் மனம் தளராத வ.உ.சி இலங்கையிலிருந்து கப்பலை வாடகைக்கு எடுத்து வந்து இயக்கி ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆனாலும், சொந்தமாகக் கப்பல் இல்லாமல் கப்பல் நிறுவனத்தை நடத்த இயலாது, என எண்ணி சொந்த கப்பல்கள் வாங்க முடிவு செய்தார். அதனால், பங்குதாரர்களைச் சேர்க்க மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்குச் சென்றார். வ.உ.சி வட இந்தியாவிற்குக் கிளம்பும்போது ‘‘திரும்பினால் கப்பலுடன் திரும்புவேன், இல்லையெனில் கடலில் விழுந்து மாண்டுபோவேன்’’ என்று சூளுரைத்துச் சென்றார். தனது சபதத்தை நிறைவேற்றி ‘காலியோ’ என்ற கப்பலுடன் திரும்பினார். பிரான்சிலிருந்து மேலும் ஒரு கப்பலை வாங்கி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
இந்தியச் செய்தித்தாள்கள் அனைத்தும் இதுகுறித்து கட்டுரைகள் வெளியிட்டு வ.உ.சி அவர்களைப் பாராட்டின. கப்பல் நிறுவனம் மெதுவாக வளர்ந்தது. மக்கள் சுதேசி கப்பலிலேயே பயணம் செய்தனர். வணிகர்கள் தங்கள் சரக்குகளை சுதேசிக் கப்பலிலேயே அனுப்பினர். பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் இந்த போட்டியைச் சமாளிக்க முடியாமல் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்தது. கடைசியில் இலவசமாக அழைத்துச் செல்வதாகக் கூறியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்தின் தந்திரம் குறித்து வ.உ.சி மக்களிடையே விளக்கினார். சுதேசி கப்பல் நிறுவனத்தை அழித்த பிறகு அவர்கள் தங்கள் கட்டணத்தை விருப்பம்போல் ஏற்றிவிடுவார்கள். அப்போது இந்தியர்களால் ஒன்றும் செய்ய இயலாமல் போகும். அதனால், இந்தியர்கள் இலவசப் பயணத்தை மறுத்துவிட்டனர். இதனால்தான் அவர் ‘‘கப்பலோட்டிய தமிழன்’’ என்று போற்றப்பட்டார்.
சுதேசி கப்பல் வெற்றியைத் தொடர்ந்து, மக்களிடையே விடுதலைப் போராட்ட உணர்வைத் தூண்ட நினைத்தார். இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் செயல்பட வ.உ.சிக்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. தூத்துக்குடி கோரல் நூற்பாலைத் தொழிலாளர்களுக்கு கூலி மிகவும் குறைவு. ஆனால், பன்னிரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக கடினமாக உழைக்க வேண்டும். அவர்களுக்கு விடுமுறை கிடையாது. தொழிலாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
தொழிலாளர்களின் அவல நிலையைப் பார்த்த வ.உ.சி மிகவும் வருந்தினார். நூற்பாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்டினார். வ.உ.சியும், சுப்பிரமணிய சிவாவும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்தனர். நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சி ஆங்கிலேயர்களுக்கு எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது. நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சியைக் கைது செய்வது அவசியம், என்று நினைத்தார்கள்.
1908ஆம் ஆண்டு வ.உ.சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாட்டு மக்களை விடுதலைப் போராட்டத்திற்குத் தூண்டிய குற்றத்திற்கு 20 ஆண்டுகள், சுப்ரமணிய சிவாவுக்கு ஆதரவு அளித்ததற்காக 20 ஆண்டுகள் என இரட்டை ஆயுள்தண்டனை அளிக்கப்பட்டது. அப்போது வ.உ.சியின் வயது 36. இந்தக் கொடிய தீர்ப்பைக் கேட்டு இந்திய மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வ.உ.சி முதலில் கோயம்புத்தூர் சிறையிலும், பின்னர் கண்ணனூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிறையில் வ.உ.சி கடுமையான வேலைகளைச் செய்தார். சணல் நூற்றார். அப்போது அவரது உள்ளங்கைகளில் இருந்து ரத்தம் கசிந்தது. கல் உடைத்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இழுத்தார். அந்தப் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒரு மாடு போல் உழைத்தார்.
அவரது நண்பர்கள் லண்டனில் உள்ள மன்னர் அவையில் (பிரிவியூ கவுன்சிலில்) முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்காலம் குறைந்தது. 1912ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் வ.உ.சி விடுதலை அடைந்தார். கோயம்புத்தூர் மத்திய சிறைச் சாலையில் வ.வு.சி இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் பொருளாதார விடுதலைக்காகவும் பாடுபட்ட வ.உ.சி நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே 1936ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் மறைந்தார்.
வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைந்துள்ளது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வ.உ.சி அஞ்சல் தலை முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களால் 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் வெளியிடப்பட்டது.
The post கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் appeared first on Dinakaran.