பழநி: பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க பழநி கோயில் தைப்பூசத் திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. வரும் பிப்.10ம் தேதி திருக்கல்யாணம், 11ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இது முருகப்பெருமானின் மூன்றாவது படைவீடாக அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசம் ஒன்றாகும். இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தைப்பூச தினத்தன்று சாமி தரிசனம் செய்வர்.
இந்தாண்டு தைப்பூசத் திருவிழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் காலை 11 மணியளவில் விநாயகர் பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. கொடிக்கம்பம் முன்பு மத்தளம் உள்ளிட்ட வாத்தியங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து வளர்பிறை, சூரியன், சேவல், மயில், வேல் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது.
10ம் தேதி திருக்கல்யாணம்; 11ல் தேரோட்டம்;
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தந்தப் பல்லக்கு, வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வரும் 10ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெற உள்ளது. தைப்பூசத் தேரோட்டம் 11ம் தேதி மாலை 4.45 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. 14ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். கொடியேற்ற நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, சித்தனாதன் சன்ஸ் எஸ்ஜி சிவனேசன், எஸ்ஜி பழனிவேல், கந்தவிலாஸ் செல்வக்குமார், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், எஸ்பிஎன்ஏ வித்யாஸரம் தாளாளர் சுந்தரம், கட்டிடவியல் வல்லுநர் நேரு, அறங்காவலர் குழு தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலர்கள் க.தனசேகர், ஜி.ஆர்.பாலசுப்பிரமணியம், சு.பாலசுப்பிரமணி, சி.அன்னபூரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.