சென்னை,
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். இந்த போட்டியில் இன்று அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பீகார் வீராங்கனை ஒருவரின் பவுல் பிளே தொடர்பாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதத்தின்போது நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால், விளையாட்டு களம் பரபரப்பானது. கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார். இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
உடலில் காயங்களுடனும், மனதில் வேதனைகளுடனும் நாளை வரை ரெயிலுக்கு காத்திருக்க வேண்டுமா? டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா? இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா? கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது! விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார். வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவம் அளிக்க வேண்டும். விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்! மீட்பதற்கு அரசு தயாரா? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.