பெங்களூரு,
கர்நாடகாவில் கால்கெரே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.
அப்போது, கணவரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய அந்த பெண் அரை மணிநேரத்தில் வந்து விடுவேன் என கூறியிருக்கிறார். ஆனால், இரவு ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இதனால், பல இடங்களில் தேடிய அவருடைய கணவர் பின்னர், வீட்டுக்கு திரும்பி அவருக்காக காத்திருந்து இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று (வெள்ளி கிழமை) காலை ஏரி பகுதியில் நடந்து சென்ற நபர் ஒருவர் பெண் ஒருவரின் சடலம் கிடப்பது கண்டு திடுக்கிட்டார். உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, உடலை கைப்பற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், அவர் நஜ்மா (வயது 28) என தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, படுகொலை செய்துள்ளனர். வங்காளதேச நாட்டை சேர்ந்த அந்த பெண் இந்தியாவுக்குள் சட்டவிரோத வகையில் ஊடுருவியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
ஏனெனில் அவருக்கான ஆவண சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால், நஜ்மாவின் கணவரிடம் ஆவணங்கள் உள்ளன. அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. அவர்களுடைய குடும்பம் 5 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறது என்றார். இந்த சம்பவம் பற்றி சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.