கன்னையா லால் கொலை வழக்கை சித்தரிக்கும் ‘உதய்பூர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

4 hours ago 1

புதுடெல்லி: கன்னையா லால் கொலை வழக்கை சித்தரிக்கும் ‘உதய்பூர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தையல்காரர் கன்னையா லால் என்பவர், முகமது ரியாஸ் மற்றும் முகமது கவுஸ் ஆகியோரால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து பதிவிட்டதற்குப் பழிவாங்கும் செயலாக இந்தக் கொலை நடந்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ‘உதய்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம், ஜூலை 11 அன்று (இன்று) நாடு முழுவதும் 1,800 திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த கொலை வழக்கு தற்போது ஜெய்ப்பூரில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்திற்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

 

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘இந்தத் திரைப்படம் வன்மமும் வெறுப்பும் நிறைந்தது; இது ஒரு கலை சார்ந்த படைப்பு அல்ல; இந்த திரைப்படம் வெளியானால் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும்’ என்று கடுமையாக வாதிட்டார். ஆனால், மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) சார்பில், ‘இந்த திரைப்படம் குற்றத்தை மையமாகக் கொண்டது; எந்தவொரு சமூகத்தையும் குறிவைக்கவில்லை. நுபுர் சர்மா, தேவ்பந்த் போன்ற குறிப்புகள் நீக்கப்பட்டு, 55 திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய் அடங்கிய அமர்வு, ‘மனுதாரர்கள் ஒளிப்பதிவுச் சட்டத்தின் கீழ் முதலில் ஒன்றிய அரசை அணுகியிருக்க வேண்டும்’ எனக் கூறி, ஒன்றிய அரசு இதுகுறித்து முடிவெடுக்கும் வரை ‘உதய்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர்கள் இரண்டு நாட்களுக்குள் ஒன்றிய அரசை அணுக வேண்டும் என்றும், ஒன்றிய அரசு அடுத்த ஒரு வாரத்திற்குள் தயாரிப்பாளர் தரப்பு வாதத்தையும் கேட்டு முடிவை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

The post கன்னையா லால் கொலை வழக்கை சித்தரிக்கும் ‘உதய்பூர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு தடை: டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article